கரோனா காலத்தில் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் கோவில்கள் மூடப்பட்டன. வரும் 30ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பல்வேறு நிபந்தனைகளுடன் கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. மத்திய அரசு தளர்வு கொடுத்ததில் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் கோயில்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நோய் தொற்று அச்சுறுத்தல் நீடிப்பதால் கோயில்கள் திறப்பது குறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை.
கோயில்களை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டால், உடனடியாக திறப்பதற்குரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை தமிழகத்தில் உள்ள கோயில் நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகிறது. கோயிலுக்கு வரும் பக்தா்கள் கை, கால்களை சுத்தம் செய்து கொள்ளும் வகையில், நுழைவாயில்களுக்கு அருகே தண்ணீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயில்களை திறக்க உத்தரவு வராத நிலையில், தமிழகத்தில் உள்ள கோயில்களில் உண்டியல்கள் பாதுகாப்போடு திறந்து எண்ணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டரை மாதங்களுக்கு மேலாக பூட்டிக் கிடப்பதால் உள்ளே இருக்கும் பண நோட்டுகள் பிசுபிசுத்துப்போகும், வீணாகிப்போகும் என்பதால் இந்தப் பணிகள் நடக்கிறதாம். திருச்சி சமயபுரம் கோவிலில் உண்டியல் திறக்கப்பட்டதில் அரை கிலோ தங்கம், ஒன்றரை கிலோ வெள்ளி, ரூபாய் 31 லட்சம் ரொக்கம் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதேபோல் மற்ற கோவில்களிலும் பாதுகாப்போடு உண்டில்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-மகேஷ்