ஒட்டுமொத்த தொண்டர்களையும் சந்தித்ததில் விஜயகாந்த் மகிழ்ச்சியாக உள்ளார் என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 70 ஆவது பிறந்தநாளிற்கு சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் நேரில் சந்தித்தும் சமூக வலைத்தளங்களிலும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் விஜயகாந்த் சென்னை கோயம்பேட்டில் உள்ள தனது கட்சித் தலைமை அலுவலகத்தில் தொண்டர்களைச் சந்தித்தார். மேலும் அங்கு அவரது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அப்போது தொண்டர்களைப் பார்த்துக் கையசைத்து தனது மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தேமுதிகவின் பொருளாளருமான பிரேமலதா விஜயகாந்த், "மக்கள், விஜயகாந்தை நடிகராகவும், அரசியல்வாதியாக மட்டும் பார்க்கவில்லை. மனிதநேயமிக்க ஒருவராக நினைக்கின்றனர். கட்சியில் உட்கட்சித் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது. அது இந்த மாதத்தில் முடிவடையும். அதன் பின் செயல் குழு பொதுக்குழு கூட்டம் கூடும். மின்கட்டண உயர்வு பெட்ரோல், டீசல் விலை உயர்வு சொத்துவரி உயர்வு அனைத்திற்கும் தேமுதிக காலத்தில் இறங்கி போராட்டம் செய்துள்ளது.
இனிமேலும் செய்யும். இன்று விஜயகாந்த் ஒட்டு மொத்த தொண்டர்களை சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சியாக உள்ளார் மேலும் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு கட்சி சார்பில் உரிய நேரத்தில் தெரிவிக்கிறோம். தற்போது கட்சியில் உள்ள அனைவருக்கும் பதவி கொடுத்தது விஜயகாந்த்தான். இதன் பிறகும் யாருக்கு என்ன பதவி என்பதை அவரே முடிவு செய்வார்" எனத் தெரிவித்தார்.
.