தமிழக அமைச்சரவையை விரைவில் மாற்ற எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்துள்ளதாக அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் ஆன பிறகு இதுவரை அமைச்சரவையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. அமைச்சரவையில் உள்ள விஜய பாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினரிடம் மீது சிபிஐ விசாரணை மற்றும் வருமான வரித்துறை ரெய்டுகள் நடந்துள்ளன.
முதல் முறையாக அந்த ரெய்டுகள் இப்போது வேகம் எடுத்துள்ளன. அமைச்சர் விஜய பாஸ்கரையும், அவரது பி.ஏ.வையும் குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ விசாரிக்க திட்டமிட்டு, விஜயபாஸ்கரின் பி.ஏ.வான சரவணன் சிபிஐ விசாரணையில் டிச. 07 வெள்ளிக்கிழமை ஆஜராகியிருக்கிறார்.
எனவே முதல் கட்டமாக விஜய பாஸ்கரை சுகாதாரத்துறையில் இருந்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் உடுமலை ராதாகிருஷ்ணனை நியமிக்க எடப்பாடி திட்டமிட்டுள்ளாராம்.
விஜய பாஸ்கரை நீக்குவதாக எடுக்கப்பட்ட முடிவு, கவுண்டர் மற்றும் தேவர் இன அமைச்சரிகளிடையே நிலவும் மோதலை வலுப்படுத்தியுள்ளது. விஜய பாஸ்கருக்கு ஆதரவாக தேவரின அமைச்சர்கள் எடப்பாடியிடம் பேசி வருகிறார்கள். இப்படி அமைச்சர்கள் மத்தியிலேயே மோதல் அதிகரித்து வருவதால் அமைச்சரவையை மாற்றுவதில் எழும் சிக்கல்களை எப்படி சமாளிப்பது என்ற ஆலோசனையிலும் எடப்பாடி ஈடுபட்டுள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.