என்னதான் நடப்பு சாம்பியனாக இருந்தாலும், அதற்கான அறிகுறிகள் கொஞ்சம் கூட இல்லாமல் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வருகிறது மும்பை இந்தியன்ஸ் அணி. அசாதாரணமான பேட்டிங் லைன்-அப், நேர்த்தியான பவுலிங் செட்-அப், உலகத்தரம் வாய்ந்த டி20 வீரர்கள் என எல்லாம் இருந்தும், தொடர் சொதப்பல்களால் இந்த சீசனை ஒரு கெட்டக்கனவைப் போல கடந்துகொண்டிருக்கிறது அந்த அணி.
இதுவரை ஐந்து போட்டிகளில் களமிறங்கியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஒரேயொரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையின் வான்கடே மைதானத்தில் வைத்து இரவு 8 மணிக்கு தொடங்கவிருக்கும் இந்தப் போட்டியில் மட்டுமின்றி, இனிவரும் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது மும்பை அணி.
வார்னர் இல்லாத இடத்தை நிரப்பிக் கொண்டிருந்த தவான் முழங்கால் காயம் காரணமாக முந்தைய போட்டியில் களமிறங்கவில்லை. அது ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்து அணிக்கு திரும்பியுள்ளதாக தெரிகிறது. ஆனால், அந்த அணியின் நட்சத்திர பவுலர் புவனேஷ்வர் குமார் மும்பை செல்லவில்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இது மிகப்பெரிய பின்னடைவு இல்லையென்றாலும், வாய்ப்புக்காக காத்திருக்கும் மும்பை அணிக்கு இது சாதகமானதாக மாறலாம்.
இதுவரை மும்பை அணி தோற்றுள்ள நான்கு போட்டிகளிலும், கடைசி ஓவர் வரை வந்து நூலிழையில் வெற்றியைத் தவறவிட்டிருக்கிறது. ஆனால், அந்த அணிக்குக் கிடைத்துள்ள ஒரேயொரு வெற்றி மிகப்பிரமாண்டமானது. அதேபோல், ஐதராபாத் அணி சென்னை உடனான போட்டியில், கடைசி ஓவர் வரை வந்து தோல்வியைத் தழுவியது. இந்த சீசனில் இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேர் மோதும் கடைசி லீக் ஆட்டம் இதுவென்பதால், அந்த கடைசி ஓவர் மாயத்தை யார் முறியடிக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.