நேற்றைய போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 337 ரன்களை குவித்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணி 338 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பெரிய இலக்கை நோக்கி விளையாடியது. ஆனால் இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த போட்டியில் தோனி மற்றும் கேதர் ஜாதவ் ஜோடி விளையாண்ட விதம் பெரிய விமர்சனத்தையும், சர்ச்சையும் கிளப்பியது. இந்த உலக கோப்பையில் எல்லா போட்டியிலும் தோனி மிகவும் மெதுவாகவே ஆடி வருவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த ஆப்கானிஸ்தான், மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியிலும் தோனி பேட்டிங் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்திய அணிக்கு கடைசி 10 ஓவரில் 10 ரன் ரேட் தேவை என்ற நிலையில் தோனி தொடர்ந்து சிங்கிள் அடித்து ரசிகர்களை மிகவும் வெறுப்பேற்றியது. மறுமுனையில் ஆடிய கேதார் ஜாதவும் மாறி மாறி சிங்கிள் வைத்துக் கொண்டே இருந்தார். இதனால் ஓவருக்கு 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஓவருக்கு 6 ரன்கள் வந்தால் போதும் என்றே இரண்டு வீரர்களும் மாறி மாறி ஆடிகொண்டு இருந்தனர். வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்று இந்த ஜோடி கொஞ்சம் கூட கவலை படவில்லை என்று சமூக வலைத்தளங்களில் விமர்சனம் எழுந்தது. முன்னாள் வீரர்கள் பலர் தோனி, ஜாதவ் ஜோடி ஆட்டம் குறித்து விமர்சனங்களை வைத்துள்ளனர். மேலும் கடைசி இரண்டு ஓவர் இருக்கும் போது தோனி, ஜாதவ் ஜோடி ஆட்டம் பிடிக்காமல் ரசிகர்கள் மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்து விட்டனர்.