உலகக்கோப்பையில் நேற்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான், மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் ஹோப் மற்றும் பூரன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்தது. நேற்றைய ஆட்டம் இந்த உலகக்கோப்பை தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் கடைசி ஆட்டமாக அமைந்தது.
அந்த அணியின் கடைசி ஆட்டம் என்பதால், தனது கடைசி உலகக்கோப்பையில் விளையாடும் அந்த அணியின் அதிரடி வீரர் கெய்ல் சிறப்பாக ஆடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 பந்துகளை சந்தித்த அவர் வெறும் 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
பின்னர் 312 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாட தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி கடைசிவரை போராடி 288 ரன்கள் மட்டுமே எடுத்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் இந்த உலகக்கோப்பையை மேற்கிந்திய தீவுகள் அணியும், தனது கடைசி உலகக்கோப்பையை கெயிலும் வெற்றியுடன் முடித்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்தது மேற்கிந்திய அணி வீரர்கள் அவருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
அதன் பிறகு பேசிய கெய்ல், "இந்த முறை உலகக்கோப்பையை நாங்கள் வெல்ல வேண்டும் என்று விரும்பினோம். ஆனால் அதேநேரம் இந்த தொடரில் பல போட்டிகளில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். எங்களுக்கு இந்த தொடர் ஒரு நல்ல அனுபவமாக அமைந்தது. இந்த நாள் , இந்த தருணம், எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக தருணம்" என கூறினார். இதுவரை 5 உலகக்கோப்பை தொடரில் விளையாடியுள்ள கெய்ல் இந்த உலக்கோப்பைத்தான் தன்னுடைய கடைசி உலகக்கோப்பை என ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.