அது 2000 ஆவது ஆண்டு. தொடர் தோல்விகள், மேட்ச் ஃபிக்சிங் புகார்கள் என தடுமாறிக்கொண்டிருந்தது இந்திய அணி. ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து விடாதா மீண்டும் இந்திய அணி நிமிர்ந்து எழுந்து விடாதா என்று இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தனர்.
துவண்டு கிடந்த அணியை மீட்டெடுக்கும் இமாலயப் பொறுப்பை ஏற்றிருந்தது வங்கச் சிங்கம், சவுரவ் கங்குலி. அணியை மீட்டெடுக்க வேண்டுமானால் சிறப்பான விளையாட்டு வீரர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை கங்குலி உணர்ந்திருந்தார். அதேபோல், அந்த காலகட்டங்களில் ஃபீல்டிங்கில், மிடில் ஆர்டரில், ஆல் ரவுண்ட் பெர்பார்மன்ஸில் கொஞ்சம் வீக்காக இருந்தது இந்திய அணி.
அப்போதைய கிரிக்கெட் ஜாம்பவான்களை எதிர்த்து நிற்க, அதேயளவு திறமையுள்ள ஒரு அணியை கட்டமைக்கவேண்டும் என்பதில் தெளிவாய் இருந்தார் கங்குலி. கங்குலியின் அந்த தீராத தேடலின் ஒரு மகத்தான விடைதான் யுவ்ராஜ் சிங்.
பாய்ந்து பந்தை பிடிக்கும் லாவகம், மிடில் ஆர்டரில் எதிரணிக்கு சிம்மசொப்பனம், பவுலிங்கிலும் சரசரவென விக்கெட் எடுக்கும் வேகம் என இந்திய அணி தேடிக்கொண்டிருந்த அந்த மேஜிக்கல் வீரராக உருவாகினார் யுவ்ராஜ் சிங்.
அறிமுகமான முதல் தொடரிலேயே குவார்ட்டர் ஃபைனலில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டியில், தலைசிறந்த பௌலிங் அட்டாக்கை எதிர்த்து 80 ரன்கள் எடுத்து, இந்தியாவை வெற்றி பெற வைத்தார் யுவ்ராஜ். இந்தியா முதன்முதலில் யார்ரா இவன் என்று லேசாக தலையை திருப்பியது. அந்த போட்டியில் அவரது ஃபீல்டிங்கிலும் பொறி பறந்தது.
ரசிகர்களின் கவனம் யுவ்ராஜின் மீது விழ ஆரம்பித்த சில நாட்களில், தொடர்ந்து சொதப்பினார் யுவ்ராஜ். அதற்கு அடுத்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியும் 55 ரன்கள்தான் எடுத்தார். ஆனால் அடுத்த வருடம் நடந்த போட்டியில், யுவ்ராஜ் தான் ஒரு பேட்ஸ்மென் மட்டுமல்ல, பௌலரும் கூட என்று தனது ஆல்ரவுண்ட் திறமையை நிரூபித்தார். அந்த தொடரில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
மீண்டும் கொஞ்சம் சொதப்பல். அணியை விட்டு நீக்கம். சில மாதங்கள் எந்த இன்டர்நேஷனல் போட்டிகளிலும் விளையாடவில்லை யுவ்ராஜ். ஆனால் எப்போதும் போல் நம்பிக்கையை விட்டுவிடவில்லை. திலீப் ட்ராஃபி போட்டியில் அவர் விளாசிய 209 ரன்கள் உடனே அவரை இந்திய அணிக்குள் கொண்டு வந்தது.
இந்த வாய்ப்பை விடாமல் கெட்டியாக பற்றிக் கொண்டார் யுவ்ராஜ். முதல் போட்டியில் 60 பந்துகளில் 80 ரன்கள், ஃபைனலில் 52 பந்துகளில் 75 ரன்கள் என அணியில் தன் இடத்தை உறுதிப்படுத்திக்கொண்டார் யுவ்ராஜ்.
ஆனால் இந்திய அணியில் அசைக்க முடியாத வீரராக யுவ்ராஜ் உருவெடுத்தது அடுத்து நடந்த நாட்வெஸ்ட் தொடரில்தான். லார்ட்ஸ் மைதானத்தில் நாட்வேஸ்ட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி 326 என்ற இமாலய இலக்கை வைத்தது. பின்னர் ஆடிய இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் நல்ல தொடக்கத்தை தந்தனர். 106 ரன்களில் ஒரு விக்கெட் என்ற நிலையிலிருந்து 146 ரன்களுக்கு ஐந்து விக்கெட் இழந்து தடுமாறியது இந்திய அணி.
26 ஓவரில் 179 ரன்கள் தேவைப்பட்ட இக்கட்டான நிலையில் களத்தில் யுவராஜ் மற்றும் கைஃப் ஆகிய இரு இளம் வீரர்கள் இருந்தனர். இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டிகளின் 2-வது பேட்டிங் இந்திய நேரப்படி இரவு நேரங்களில் நடைபெறும். முக்கிய விக்கெட்கள் இழந்து கடைசியாக அனுபவமில்லாத இரு இளம் வீரர்கள் மட்டுமே விளையாடுவதால் இந்திய அணி இந்த ரன்களை அடிக்க வாய்ப்பில்லை என இந்தியாவில் மேட்ச் பார்க்காமல் உறங்க சென்றனர் பலர்.
ஆனால் அந்த 2 வீரர்களும் உலக கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரத்தை படைத்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை அறியாமல் பலர் டிவியை ஆப் செய்தனர். இந்திய அணி ஒரு சரித்திர வெற்றி படைத்ததை காலையில் எழுந்து தான் பலர் அறிந்தனர். பிளின்டாப், டேரன் காஃப், அலெக்ஸ் டியூடர் ஆஷ்லே கில்ஸ் என சிறந்த பவுலிங் யூனிட்டை வெளுத்து வாங்கியது இந்த இளம் ஜோடி. யுவராஜ், கைஃப் இருவரும் அரைசதம் அடித்து, 121 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றி பெற வைத்தனர். போட்டியை பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்களை ஏமாற்றாமல் இந்தியாவை வரலாற்று வெற்றி பெற வைத்தனர் இவர்கள். யுவராஜ் சிங்கின் சாதனைப் பயணம் தொடங்கியது இதிலிருந்துதான்.
இதற்குப் பிறகு சில போட்டிகளில் சொதப்பினாலும் 2003 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றார் யுவராஜ் சிங். பாகிஸ்தானுக்கு எதிராக 50 நாட் அவுட், கென்யாவிற்கு எதிராக 58 நாட் அவுட் என சில போட்டிகளில் நன்றாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவினாலும், பெரிதாக அந்த உலகக் கோப்பையில் சோபிக்கவில்லை யுவராஜ்.
ஆனால் உலகக்கோப்பை முடிந்த அடுத்த மாதமே, தன் முதல் சென்சுரியை பங்களாதேஷிற்கு எதிராக அடித்தார் யுவராஜ். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தின் யார்க்சைர் கிரிக்கெட் கிளப்பில் விளையாட ஒப்புக்கொண்டார் யுவ்ராஜ். சச்சினுக்கு பிறகு இந்தியாவில் இருந்து அந்த போட்டியில் விளையாடிய வீரர் யுவராஜ சிங் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பிறகு ரெகுலராக இந்திய அணியில் விளையாட ஆரம்பித்தார் யுவராஜ். 2007 ஆம் ஆண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடினார். ஆனால் அந்த உலகக் கோப்பை இந்தியாவிற்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்த உலகக் கோப்பை. பங்களாதேஷிடம் தோற்று லீக் போட்டிகளிலேயே வெளியேறியது இந்தியா.
இந்திய அணியில் மீண்டும் மாற்றங்கள் செய்யவேண்டிய நிர்பந்தம். கேப்டன் பொறுப்பிலிருந்து ராகுல் ட்ராவிட் விலகியிருக்க, அடுத்த தலைமுறைக்கான அணியை தேர்ந்தெடுக்கவேண்டிய கட்டாயம். அதைவிட முக்கியமாக, அடுத்த சில மாதங்களில் வரவிருந்த 20-20 உலகக் கோப்பைக்கான அணியை உருவாக்க வேண்டிய சூழல்.
ரிஸ்க் எடுத்தே ஆகவேண்டிய நிலைமை. இறங்கி ரிஸ்க் எடுத்தது இந்தியா. கேப்டனான மகேந்திர சிங் தோனியையும் வைஸ் கேப்டனாக யுவ்ராஜையும் நியமித்து, முற்றிலும் புதிய இளம் அணியை 20-20 உலகக் கோப்பைக்கு அனுப்பி வைத்தது இந்தியா. எடுத்த ரிஸ்க் வீண் போகவில்லை. அனைத்து அணிகளையும் தோற்கடித்து முதல் டி 20 உலகக் கோப்பையை வென்றது அந்த இளம் இந்திய அணி.
அந்த தொடர் முழுக்க யுவ்ராஜ் எடுத்தது விஸ்வரூபம். முக்கியமாக இங்கிலாந்திற்கு எதிரான போட்டியில், ஃப்ளின்டாஃப் உடன் ஏற்பட்ட உரசலைத் தொடர்ந்து பவுலிங் போட வந்த ஸ்டூவார்ட் ப்ராடை துவைத்து எடுத்தார் யுவ்ராஜ். 6 பந்துகள். 6 சிக்ஸர்கள். ஸ்டேடியம் மிரண்டது. கிரிக்கெட் உலகமும் மிரண்டது. அதற்கு முன்பு ஒரு ஓவரில் 6 சிக்ஸர்கள் என்ற சாதனையை சிலர் செய்திருந்தாலும் அது சிறிய அணிகளுக்கு எதிரேதான். ஆனால் ஒரு பலம் வாய்ந்த அணிக்கு எதிராக இந்த சாதனையை நிகழ்த்தியது யுவராஜ் சிங் மட்டுமே.
செமி ஃபைனலில் 30 பந்துகளில் யுவராஜ் அடித்த 70 ரன்கள் ஆஸ்திரேலியாவை வீட்டிற்கு அனுப்பியது. அந்த உலகக்கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்கள் ஒவ்வொருக்கும் பிசிசிஐ சார்பில் 80 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால் யுவராஜுக்கு மட்டும் எக்ஸ்ட்ராவாக 1 கோடி ரூபாயும் ஒரு போர்ஷ் 911 காரையும் வழங்கியது பிசிசிஐ. அந்தளவுக்கு இருந்தது யுவராஜின் ஆட்டம் அந்த உலகக் கோப்பையில்.
உலகக் கோப்பையில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிக்கும் தோனி, யுவராஜை முறையே கேப்டன், வைஸ் கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. யுவராஜ் டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டாலும் டெஸ்ட் மேட்ச்சுகள் யுவராஜிற்கு கடுமையாகவே இருந்தன.
இந்திய டெஸ்ட் அணியில் தொடர்ந்து இடம்பெற யுவராஜ் கொஞ்சம் காத்திருக்க வேண்டும் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் அனில் கும்ப்ளே பேட்டி கொடுத்தார். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான அந்த தொடரின் மூன்றாவது போட்டியில் 169 ரன்கள் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு கொண்டு சென்றார் யுவராஜ்.
யுவராஜ் அதற்கடுத்து விஸ்வரூபம் எடுத்தது 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் தான். யுவராஜின் கோல்டன் வேர்ல்ட் கப் இது என்று விமர்சகர்கள் கூறுவர். அந்த அளவிற்கு பேட்டிங் பௌலிங் ஃபீல்டிங் என்று எல்லாவற்றிலும் அடித்து விளாசினார் யுவராஜ். 362 ரன்கள், நான்கு 50+ ரன்கள், 4 மேன் ஆஃப் தி மேட்ச், மேன் ஆஃப் த சீரியஸ் என்று எல்லா திசைகளிலும் சுழன்று அடித்தார் யுவராஜ். உலகக் கோப்பையில் 300 ரன்கள் ப்ளஸ் 15 விக்கெட்டுகள் எடுத்த முதல் ஆல்ரவுண்டர் என்ற பெருமையையும், அயர்லாந்திற்கு எதிரான போட்டியில் 50 ரன்கள் ப்ளஸ் 5 விக்கெட் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் பெற்றார் யுவராஜ்.
யுவராஜ் புகழின் உச்சிக்கு சென்ற இதே உலகக்கோப்பை தொடரில் தான், யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கையை புரட்டிப் போட்ட கேன்சரின் அறிகுறியும் தென்பட ஆரம்பித்தது. உலகக் கோப்பை முடிந்தவுடன் நடந்த மருத்துவ சோதனையில் யுவராஜிற்கு லங் கேன்சர் என்று தெரியவந்தது.
அவ்வளவுதான் யுவராஜ். யுவராஜின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் வழக்கம்போல் நம்பிக்கையை விடவில்லை யுவராஜ். கீமோதெரபி ட்ரீட்மென்ட் முடிந்து, தீவிரமான பயிற்சிக்குப் பிறகு, மீண்டும் கிரிக்கெட்டிற்குள் காலடி எடுத்து வைத்தார் யுவராஜ். அந்த தொடரின் Highest wicket taker ஆனார் யுவராஜ். அதற்கு அடுத்த நடந்த போட்டிகளில் பேட்டிங்கிலும் வெளுத்து வாங்கினார் யுவராஜ் சிங்.
தோற்று விடுவோம் என்று அஞ்சாத, வென்றே தீரவேண்டும் என்ற வெறியுடன் இருக்கும் வீரனிடம் எந்த நோயும், எந்த தடையும் பணிந்துதான் ஆகவேண்டும் என்று உலகிற்கு நிரூபித்தார் யுவராஜ். உலகமெங்கும் கேன்சர் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்ட பலகோடி பேருக்கு பெரும் மோட்டிவேஷனாக இருக்கிறார் யுவராஜ்.
ஓய்வுக்குப் பிறகு நான் கேன்சரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவவும் அவர்களுக்கு பயிற்சியளிக்கவும் விரும்புகிறேன் என்று அறிவித்திருக்கிறார் யுவராஜ்.
"போராடுவது, வீழ்வது, அந்த வீழ்ச்சியிலிருந்து எழுந்து மீண்டும் முன்னேறி நடப்பது எப்படி என்பதை இந்த விளையாட்டு எனக்கு கற்றுத் தந்துள்ளது" ஓய்வை அறிவிக்கும்போது யுவராஜ் சொன்ன வார்த்தைகள் இவை.
உங்களுக்கு இதையெல்லாம் கிரிக்கெட் கற்றுக் கொடுத்திருக்கலாம் யுவராஜ். ஆனால் எங்களுக்கு இதையெல்லாம் கற்றுக் கொடுத்தது நீங்கள் தான் யுவ்ராஜ். We will definitely miss you champion.