ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரின் 11 சீசன் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் 42ஆவது போட்டி இன்று டெல்லி டேர்டெவில்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது. டெல்லியில் உள்ள பெரோஷா கோட்லா மைதானத்தில் வைத்து நடக்கும் இந்தப் போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.
புள்ளிப்பட்டியலில் நேரெதிர் திசைகளில் இருக்கும் இரண்டு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி மட்டுமின்றி, மீதமிருக்கும் மூன்று போட்டிகளிலுமே வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது டெல்லி அணி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியைப் பொருத்தவரை, கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சென்னை அணியிடம் தோற்றதற்குப் பிறகு நடைபெற்ற ஐந்து போட்டிகளிலும் அடுத்தடுத்து வெற்றிபெற்றிருக்கிறது. அந்த ஐந்து போட்டிகளிலும் ஐ.பி.எல். போட்டிகளுக்கே உரித்தான அனைத்து பிரிவுகளைச் சேர்ந்த பொழுதுபோக்குகளை பார்வையாளர்களுக்கு ஐதராபாத் அணி தந்துவிட்டது எனலாம். இன்றோடு நான்கு போட்டிகளில் விளையாட இருக்கும் அந்த அணி, இன்னும் ஒரேயொரு போட்டியில் வெற்றி பெற்றாலே போதும் என்பதால், பிரச்சனையெல்லாம் டெல்லி அணிக்குதான்.
மற்ற சீசன்களை ஒப்பிடும்போது தற்போது மிகச்சிறந்த கட்டமைப்பைக் கொண்டிருக்கும் டெல்லி அணி, கடந்த கால ஆட்டங்களையே வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. காலின் மன்ரோ, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பாண்ட், பிரித்வி ஷாவ், ட்ரெண்ட் போல்ட் மற்றும் அமித் மிஷ்ரா என தரமான வீரர்களை வைத்துக்கொண்டும் அந்த அணி இன்னமும் சீசனையே தொடங்கவில்லை.
இன்னும் குறிப்பாக சொன்னால், கடந்த ஐந்து சீசன்களிலும் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியல்களில் டெல்லி அணி ஆறாவது இடத்திற்கு மேல் முன்னேறியதே இல்லை. அதிலும் மூன்று முறை கடைசி இடத்தைப் பிடித்ததைத் தவிர அந்த அணிக்கென்று பெரிய வரலாறு கிடையாது. அடுத்த நான்கு போட்டிகளுக்குள் புதிய வரலாறை அந்த அணியால் படைக்க முடியும் என்று நம்பினால் அதுவே மிகப்பெரிய மாற்றம்தான்.