Skip to main content

அதிரடிக்கு பஞ்சமில்லாத ராஜ்கோட் மைதானம்; மூன்றாவது டி20 வெற்றி யாருக்கு?

Published on 07/01/2023 | Edited on 07/01/2023

 

Rajkot Stadium is not short of action; Who won the third T20?

 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும் ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

 

டி20 தொடரில் முதல் இரு போட்டிகளில் இந்திய அணி ஒரு போட்டியிலும் இலங்கை அணி ஒரு போட்டியிலும் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது. இன்று நடக்கும் மூன்றாவது போட்டியில் இரு அணிகளும் வெற்றிபெறக் கடுமையாக முயற்சிக்கும். 

 

இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி பவர்ப்ளேயில் அதிக ரன்களை எடுத்துக் கொடுத்தால் இந்திய அணி மிடில் ஓவர்களில் வலுவான பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய இலக்கை நிர்ணயிக்க ஏதுவாக இருக்கும். பந்துவீச்சில் சிறப்பாக பந்து வீசும் அர்ஷிதீப் சிங் இரண்டாவது டி20 போட்டியில் அதிகமான நோ பால்களை வீசி ஒட்டு மொத்த அணிக்கும் டென்ஷன் ஏற்றினார். இன்றைய போட்டியில் கேப்டன் ஹர்திக் அணியில் அர்ஷ்தீப்பினை கொண்டு வருவாரா அல்லது ஹர்ஷல் படேலை கொண்டு வருவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மற்றபடி ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் சிறப்பான பார்மில் உள்ளார். இன்றைய போட்டியிலும் அவர் அசத்துவார் என்பதை எதிர்பார்க்கலாம்.

 

இலங்கை அணியைப் பொறுத்தவரை கேப்டன் ஷனகா இன்றைய போட்டியில் எந்த ஒரு மாற்றத்தையும் அணியில் ஏற்படுத்தமாட்டார் எனத் தெரிகிறது.

 

மூன்றாவது டி20 நடைபெறும் ராஜ்கோட் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது. இம்மைதானத்தில் நடந்த 4 டி20 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த அணிகளும் இரண்டு போட்டிகளில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்த அணிகளும் வென்றுள்ளன. 

 

இந்திய அணியின் உத்தேச வீரர்கள்: இஷான் கிஷன், சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், ராகுல் திரிபாதி, ஹர்திக் பாண்டியா(கே), தீபக் ஹூடா, அக்சர் படேல், ஷிவம் மாவி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்/ஹர்ஷல் படேல், யஸ்வேந்திர சாஹல்

 

இலங்கை அணியின் உத்தேச வீரர்கள்: பதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(சி), வனிந்து ஹசரங்க, சாமிக்க கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, கசுன் ராஜித, டில்ஷான் மதுஷங்க