இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் பங்கேற்கிறது.
நாக்பூரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் அனைவரும் இந்திய அணியின் சுழலில் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி 177 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக லபுசானே 49 ரன்களும், ஸ்மித் 37 ரன்களும், அலெக்ஸ் கேரி 36 ரன்களையும் எடுத்தனர். சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ரன்களை எடுத்து 1 விக்கெட்டை இழந்து இருந்தது. ரோஹித் சர்மா 69 பந்துகளில் 56 ரன்களை விளாசியும் அஸ்வின் ரன்கள் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், ஆட்டத்தின் இரண்டாவது நாளில் 56 ரன்களுடன் ஆடத் துவங்கிய ரோஹித் சர்மா சிறப்பாக ஆடி சதம் அடித்தார். அஸ்வின் 23 ரன்களில் வெளியேற புஜாரா 7 ரன்களுடனும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 12 ரன்களிலும் வெளியேறினர். டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பேட்டிங் செய்ய வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் வெளியேறினார். இதன் பின் ஜடேஜா களத்திற்கு வந்தார். நிதானமாக ரன்களை சேர்த்தார். மறுபுறம் சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 120 ரன்களில் வெளியேற தொடர்ந்து வந்த ஸ்ரீகர் பரத் 8 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பந்து வீச்சில் அசத்திய ஜடேஜா பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடி அரை சதம் அடித்தார். அக்சர் படேல் 22 ரன்களுடனும் ஜடேஜா 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியில் மர்பி 5 விக்கெட்களும், லயன் மற்றும் கேப்டன் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணி 282 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து 105 ரன்கள் முன்னிலையில் இருந்தது.
இந்நிலையில் இன்று மூன்றாவது நாள் ஆட்டம் துவங்கியது. ஜடேஜா 70 ரன்களில் ஆட்டமிழக்க அக்ஸர் மற்றும் ஷமி சேர்ந்து ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்ஸ் முடிவில் 400 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக அஸ்வின் இருந்தார். பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களிலும் ஒற்றை இலக்கங்களிலும் வெளியேற இந்திய அணி ஆஸ்திரேலியாவை 91 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 25 ரன்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
சுழலில் கலக்கிய அஸ்வின் 5 விக்கெட்களை எடுத்தார். ஷமி மற்றும் ஜடேஜா 2 விக்கெட்களை வீழ்த்தினர். அக்ஸர் படேல் 1 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. ஜடேஜா ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.