மும்பையில் இன்று முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடர் கோலாகலமாகத் தொடங்கிய நிலையில், முதல் போட்டி ஹர்மன்பிரீத் கவுர் தலைமையில் மும்பை அணியும் பெத் மூனி தலைமையில் குஜராத் அணியும் மோதியது.
டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யாஸ்திகா பாட்டியாவும், ஹெய்லி மேத்யூஸ்சும் களமிறங்கினர். ஆனால் யாஸ்திகா பாட்டியா 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து இறங்கியவர்கள் சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்த 22 பந்துகளில் அரை சதம் அடித்த மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. ஆரம்பத்திலேயே அணியின் கேப்டன் பெத் மூனி காயம் காரணமாக வெளியேற அடுத்தடுத்து களமிறங்கியவர்கள் மும்பை அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அந்த அணியில் அதிகபட்சமாக ஹேமலதா 29 (23) ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக 15. 1 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்த குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து படுதோல்வியை சந்தித்தது. இதன்மூலம் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் தொடரில் தங்களது முதல் வெற்றியை மும்பை அணி பதிவு செய்துள்ளது.