வங்கதேச சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.
ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வங்கதேச அணி வென்றுவிட்ட நிலையில், டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 14ம் தேதி தொடங்கி சாட்டோகிராமில் நடைபெற்றது. இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்குப் பதில் கே.எல்.ராகுல் கேப்டனாகச் செயல்பட்டார்.
இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 22ம் தேதி மிர்புரில் நடைபெறுகிறது. ரோஹித் சர்மாவின் விரலில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகாததால் இரண்டாவது டெஸ்டில் இருந்தும் அவர் விலகுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் கேப்டனாக கே.எல்.ராகுல் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்த அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என்று தகவல் வெளியாகியுள்ளது.