Skip to main content

மீண்டெழுமா இந்தியா? - 2 ஆவது டி20யில் நியூசியுடன் மோதல்

Published on 28/01/2023 | Edited on 29/01/2023

 

2nd T20 clash with New Zealand

 

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாட இருக்கிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

 

ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 176 ரன்களை எடுத்தது. பின் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 155 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

 

போட்டி முடிந்த பின் இந்திய அணி கேப்டன் ஹர்திக், “ஆடுகளம் எவ்வாறு செயல்படும் என்று யாருமே கணிக்கவில்லை. இரண்டு அணிகளுக்குமே ஆடுகளம் செயல்பட்ட விதம் குறித்து ஆச்சரியம் தான். நியூசிலாந்து அணி எங்களை விட சிறப்பாக விளையாடியது. பழைய பந்தை விட புதிய பந்து நன்றாக திரும்பியது. நானும் சூர்யாவும் பேட்டிங் செய்யும் வரை இலக்கை எட்டிவிடலாம் என்று தான் நினைத்தோம். நாங்கள் கடைசி கட்டத்தில் மிக மோசமாக செயல்பட்டு கூடுதலாக 25 ரன்கள் கொடுத்தது தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்தது. வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டார். இவரும் அக்ஸர் படேலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம்” எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து மோதும் இரண்டாவது டி20 போட்டி நாளை லக்னோவில் நடக்கிறது. இதில் இந்திய அணி தொடரைத் தக்கவைக்க வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. லக்னோவில் இதுவரை 5 போட்டிகள் நடந்துள்ளது. இதில் முதலில் பேட் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. நீண்ட காலத்திற்குப் பின் அணிக்குத் திரும்பிய ப்ரித்வி ஷாவிற்கு நாளை வாய்ப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.  இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். முதல் போட்டியில் அசத்திய வாஷிங்டன் சுந்தர் நாளையும் அசத்துவார் என்பதை எதிர்பார்க்கலாம். நியூசிலாந்து அணியினை பொறுத்தவரை வீரர்கள் மாற்றம் செய்யப்படாது எனத் தெரிகிறது.