Skip to main content

அன்று ஓட்டுனர் மகன்... இன்று உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு...

Published on 10/05/2019 | Edited on 10/05/2019

இந்த ஐபிஎல் சீசனில் பெங்களூர் அணியின் ஃபாஸ்ட் பவுலர்களான சிராஜ், உமேஷ் யாதவ், சவுதி ஆகியோரின் எகானமி ரேட் 10. அனைத்து தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ஆர்சிபி அணியின் ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டில் ஒரு பவுலர் மட்டும் விதிவிலக்காக அசத்தினார். 150 கிமீ வேகம், அதிக டாட் பால்கள், பர்பெக்ட் லைன் & லென்த், மிரட்டும் பவுன்சர்கள், சரியான விதத்தில் கன்ட்ரோல் என பவுலிங்கில் மாஸ் காட்டி இந்திய தேர்வுக் குழுவின் கவனத்தை தன் பக்கம் திருப்பி, உலககோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் பவுலராக தேர்ந்தெடுக்கப்பட்ட நவ்தீப் சைனி ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர்.

 

stats about cricket player navdeep saini

 

 

ஹரியானாவில் ஓட்டுனராக பணி புரிந்தவர் சைனியின் தந்தை. கிரிக்கெட் அகாடமியில் சேரும் அளவிற்கு அவரின் குடும்ப சூழ்நிலை அன்று இல்லை. இதனால் அதிகமாக டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொண்டார். அதன் மூலம் கிடைக்கும் ரூ.250 பணத்தை தன் கிரிக்கெட் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற பயன்படுத்தினார்.

உள்நாட்டு போட்டிகளுக்காக வலைப்பயிற்சிகளின்போது கவுதம் கம்பீருக்கு பந்துவீசியது சைனியின் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. சைனியின் திறமையை கண்டு அசந்த கம்பீர், அவரை டெல்லி அணியில் சேர்க்க முற்பட்டார். ஆனால் தேர்வுக்குழு, சில வீரர்கள், பயிற்சியாளர் என பல தரப்பிலும் இதற்கு எதிர்ப்பு இருந்தது. சைனி ஹரியானாவை சேர்ந்தவர் என்பதால் அவரை வெளிமாநில வீரராக பார்த்தனர். ஆனால் கம்பீரின் விடா முயற்சியால் சைனி 2013-ஆம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார்.

2017-18-களில் ரஞ்சி டிராபி தொடரில் 34 விக்கெட்கள் எடுத்து அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்தார். 2017-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் இடம்பெற்றபோதும்  ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. அடுத்த ஆண்டு பெங்களூர் அணி 3 கோடிக்கு சைனியை ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த ஆண்டும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 

டெல்லி அணிக்கு ரஞ்சி கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி வந்த சைனி ஆப்கானிஸ்தான் அணியுடன் நடைபெற்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம்பிடித்தார். அனுபவம் வாய்ந்த பவுலர்கள் அணியில் இடம் பெற்றதால் இளம் புதுமுக வீரரான சைனிக்கு அந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 

 

stats about cricket player navdeep saini

 

 

இந்த வருடம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை அரையிறுதிப்போட்டியில் பெங்கால் அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் 35 கொடுத்து 4 விக்கெட்கள் வீழ்த்தினார். இறுதிப்போட்டியில் விதர்பா அணியுடன் 135 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்கள் எடுத்தார். 

இந்த நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கிடைத்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்தி முத்திரை பதித்துள்ளார். சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஃபாஸ்ட் பவுலர்களில் அதிக விக்கெட்கள் எடுத்துள்ளார். சைனி 13 போட்டிகளில் 11 விக்கெட் வீழ்த்தியுள்ளார். சைனி இந்த ஐபிஎல் தொடரில் பவர் ப்ளே ஓவர்களில் 23 ஓவர் பவுலிங் செய்து 69 டாட் பால்கள் வீசியுள்ளார். 

மிடில் ஓவர்களில்(7 – 16) 33 டாட் பால்கள் மற்றும் எகானமி ரேட் 7.33. டெத் ஓவர்களில்(17 – 20) 9.30 எகானமி ரேட், 33 டாட் பால்கள், 8 விக்கெட்கள். இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பவுலிங் செய்த இங்கிலாந்து இளம் வீரர் ஆர்ச்சர் டெத் ஓவரில் 9.70 எகானமி ரேட், 26 டாட் பால்கள், 7 விக்கெட்கள்.

இன்னும் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் டாட் பால்களில் பும்ராவின் சராசரியை விட சைனியின் சராசரி அதிகம். சைனி 13 போட்டிகளில் 141 டாட் பால்கள் வீசியுள்ளார். பும்ராவின் டாட் பால்கள் 15 போட்டிகளில் 156, சராசரியாக ஒரு போட்டிக்கு 10.4 டாட் பால்கள். சைனி சராசரியாக ஒரு போட்டிக்கு 10.8 டாட் பால் வீசியுள்ளார்.

சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் சைனி மட்டுமே அதிக டாட் பால்கள் வீசிய வீரர்களின் டாப் 10 இடத்தில் உள்ளார். மேலும் இந்த ஐபிஎல் தொடரில் அதிவேக பவுலிங் செய்த வீரர்கள் பட்டியலில் சர்வதேச போட்டிகளில் விளையாடாத வீரர்களில் சைனி மட்டுமே முதல் 20 இடத்திற்குள் உள்ளார். 

டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசியுள்ளார் சைனி. சைனி பவுலிங்கில் தோனி 11 பந்துகள் சந்தித்து 14 ரன்கள், ரிஷாப் பண்ட் 2 பந்துகளில் 2 ரன்கள், இந்த ஐபிஎல் தொடரில் சிறந்த ஹிட்டரான ரஸ்ஸல் 8 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது. 

பல ஆண்டுகளாக பலவீனமாக இருந்த ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் தற்போது பும்ரா, புவனேஷ் மற்றும் சமி ஆகியோரால் பலமாக மாறியுள்ளது. இந்த நிலையில் சைனியின் வருகை கூடுதல் பலத்தை ஏற்படுத்தியுள்ளது.