19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தப் போட்டி நேற்று (23ம் தேதி) துவங்கி வரும் அக்டோபர் மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. ஆசிய விளையாட்டு சம்மேளனம் நடத்தும் இந்த போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள இந்தியா, இலங்கை, சீனா, மலேசியா உள்ளிட்ட 45 நாடுகள் கலந்து கொண்டுள்ளது.
இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து மட்டும் 600க்கு மேற்பட்ட வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். ஆனால், அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து ஆசிய போட்டியில் கலந்துகொள்ள இருந்த மூன்று வீரர்களுக்கு அந்த நாட்டு அரசு விசா வழங்க மறுத்துவிட்டது. இதற்கு காரணமாக சீன அரசு, “சீனா அரசாங்கம், ‘அருணாச்சலப் பிரதேசம்’ என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்கவில்லை. ஜங்னான் (அருணாச்சலப் பிரதேசம்) சீனாவின் ஒரு பகுதி ஆகும்” என விளக்கம் கொடுத்திருந்தது.
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில், இந்தியா சார்பில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கலந்துகொள்வதற்குத் தயாராக இருந்தார். ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அவர் ஆசிய போட்டி துவக்க விழாவில் கலந்துகொள்ளவில்லை. மேலும், இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாகும். சீனாவின் பாரபட்ச நடவடிக்கைகளால் ஆசிய விளையாட்டுகளின் தன்மையையும், விதிமுறைகளையும் சீனா மீறியுள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேற்று துவங்கி நடைபெற்றுவரும் ஆசிய போட்டியில் இந்தியா அடுத்தடுத்து இரண்டு வெள்ளி பதக்கங்களை வென்றுள்ளது. 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச்சுடுதலில் இந்திய மகளிர் அணி ஒரு வெள்ளி பதக்கத்தையும், துடுப்பு படகு போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஒரு வெள்ளி பதக்கத்தையும் வென்றுள்ளது.