ஐபிஎல் தொடரில் லீக் ஆட்டங்கள் அனைத்தும் முடிவடைந்து பிளே ஆஃப் சுற்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று பெங்களூரு மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.
அப்போது போது பெங்களூரு வீரர் உமேஷ் யாதவ் வீசிய பந்தை நோ-பால் என அறிவித்தார் இங்கிலாந்தை சேர்ந்த களநடுவரான நைகல் லாங். இதனால் கோபமடைந்த விராட் கோலி நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் ரீப்ளேயில் அது சரியான பந்து தான் என தெரிந்த பிறகும் நடுவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளாததால் கோலி ஆக்ரோஷமாக பேசினார். அதற்கு நடுவருக்கு பதிலுக்கு பேசினார்.
இந்நிலையில் இந்த ஆட்டம் முடிந்த பிறகு தனது அறைக்கு சென்ற நடுவர் நைகல் லாங் அறையின் கதவை எட்டி உதைத்து உடைத்துள்ளார். இதனையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் நடுவர் நைகல் லாங் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கர்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கர்நாடக கிரிக்கெட் சங்கம் நைகல் லாங்கிடம் 5000 ரூபாய் அபராதம் வசூலித்துள்ளது. தற்போது இந்த சம்பவம் ஐபிஎல் தொடரில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.