இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகமது ஷமிக்கும், அவரது மனைவிக்கும் கடந்த ஆண்டு முதல் மோதல் நிலவி வருகிறது. கடந்த ஆண்டு முகமது ஷமி மீது சூதாட்டபுகார், வரதட்சணை கொடுமை, வேறுபெண்களுடன் தொடர்பு என பல குற்றச்சாட்டுகளை அவரின் மனைவி ஹசின் கூறினார். இது குறித்து நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இதில் கிரிக்கெட் சூதாட்ட புகாரை விசாரித்த பிசிசிஐ, ஷமி மீது எந்த குற்றமும் இல்லை என அறிவித்து, அவரை எதிர்வரும் உலகக்கோப்பை அணியிலும் தேர்வு செய்தது. மற்ற வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், தனது தாய் வீட்டில் தங்கியிருக்கும் ஷமியின் மனைவி நேற்று இரவு திடீரென உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா நகரில் உள்ள ஷமி வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
ஷமியின் தாய் மற்றும் சகோதரருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், வீட்டிற்குள் செல்ல முயற்சித்திருக்கிறார். இதனையடுத்து காவல்துறைக்கு ஷமியின் தாய் போன் செய்ததையடுத்து போலீசார் அங்கு வந்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் ஷமியின் வீடு அமைந்துள்ள பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.