2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த போது விக்கெட் விழுந்தது. இதனையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வென்று கோப்பையை கைப்பற்றியது.
இந்த போட்டியில் சென்னை அணியின் வாட்சன் சிறப்பாக விளையாடி சென்னையை இறுதி கட்டம் வரை அழைத்து சென்றார். அதிரடியாக விளையாடிய வாட்சன் 59 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய அவர் கடைசி ஓவரில் தான் ரன் அவுட் ஆனார்.
இந்நிலையில் அவர் அடிபட்ட காலுடன் விளையாடும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பல ரசிகர்களும் வாட்சனின் இந்த முயற்சிக்கும், ஈடுபாட்டிற்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டைவ் அடித்ததால் அவரது காலில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிய அவர் சென்னை அணிக்காக விளையாடியுள்ளார் என தெரியவந்துள்ளது. 15 ஆவது ஓவர் மத்தியில் அவர் ரத்தம் வழியும் கால்களுடன் விளையாடும் வீடியோ தான் வைரல் ஆனது. ஆனால் இந்த ஆட்டத்தின் 8 ஆவது ஓவர் முதலே அவரது கால்களில் ரத்தம் வழிந்து அவரது பேண்ட் ரத்தத்தில் நனைந்திருந்தது.
மெக்லங்கன் வீசிய 9 ஆவது ஓவரில் அவரில் கால் பகுதி முழுவதும் ரத்தம் கசிந்துள்ளதை காண முடிகிறது. எனவே அதற்கு முன்பே அவருக்கு அடிபட்டிருக்கக்கூடும் என தெரியவந்துள்ளது. தனது அணியின் வெற்றிக்காக 12 ஓவர்கள் ரத்தம் சொட்டிய நிலையில் அடிபட்ட காலுடன் வாட்சன் விளையாடிய இந்த நிகழ்வு சென்னை அணி ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு கிரிக்கெட் ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாட்சனை பாராட்டி சமூகவலைதளங்கள் முழுவதும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. மேலும் இந்த ஆட்டத்தில் அவருக்கு முழங்காலில் ஏற்பட்ட காயத்திற்காக 6 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.