2019 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டிகள் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்க உள்ளன. இந்த உலகக்கோப்பையில் ஜூன் 5 ஆம் தேதி இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. இந்நிலையில் இந்த உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை இதுவரை உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் இந்த உலகக்கோப்பை தொடர் ஜூலை 14 ஆம் தேதி வரை நடக்கிறது. இதன் ஒருகட்டமாக இந்த தொடரில் வெற்றி பெரும் அணிகளுக்கான பரிசு தொகை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.70 கோடியே 12 லட்சத்து82 ஆயிரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இறுதி ஆட்டத்தில் விளையாடும் இரு அணிகளும் இந்த தொகையை பங்கிட்டுக்கொள்ளும்.
இதன்படி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ. 28,05,12,800 பரிசாக வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ. 14,02,56,400 வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கும் தலா ரூ. 5,61,02,560 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.