வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டித்தொடரை வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள நிலையில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட் சட்டோகிராமில் நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 404 ரன்களை இந்திய அணி குவித்தது. அதிகபட்சமாக புஜாரா 90 ரன்களையும் ஸ்ரேயாஸ் 86 ரன்களையும் எடுத்தனர்.
இதன்பின் களமிறங்கிய வங்கதேச அணி தனது முதல் இன்னிங்ஸில் மொத்தமாகவே 150 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணியின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன்பின் களம் கண்ட இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 258 ரன்களுடன் டிக்ளேர் செய்தது. கிட்டத்தட்ட 52 இன்னிங்ஸ்களுக்கு பிறகு புஜாரா சதமடித்ததும் சுப்மன் கில் சதமடித்ததும் குறிப்பிடத்தக்கது.
இதன்பின் 513 ரன்களை இலக்காகக் கொண்டு தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய வங்கதேச அணி மூன்றாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று துவங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில் வங்கதேச துவக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஷாண்டோ 67 ரன்களில் வெளியேற ஜாகீர் ஹாசன் 100 ரன்களை அடித்து அஸ்வின் பந்துவீச்சில் அவுட்டானார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற முஷ்தபிஷுர் ரஹ்மான் 23 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். நான்காம் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி 272 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்திருந்தது.
இந்நிலையில் இன்று துவங்கிய 5 ஆம் நாள் ஆட்டத்தில் வங்கதேச அணி வேகமாக விக்கெட்களை பறிகொடுத்தது. நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ஷாகிப் அல் ஹசன் மட்டும் 84 ரன்களை எடுத்திருந்தார். இறுதியில் வங்கதேச அணி 324 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்திய அணி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரண்டாவது இன்னிங்ஸில் அக்ஸர் படேல் 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்களையும் எடுத்தனர். ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டார். அவர் இரு இன்னிங்ஸ்களையும் சேர்த்து மொத்தமாக 8 விக்கெட்களையும் முதல் இன்னிங்ஸில் 40 ரன்களையும் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.