பஞ்சாப் மாநிலத்தில் 1954ஆம் ஆண்டு பிறந்தவர் யஷ்பால் சர்மா. 1978ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான இவர், அதற்கடுத்த ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த மிடில் ஆர்டர் வீரராக திகழ்ந்த இவர், இன்று (13.07.2021) மாரடைப்பால் காலமானார்.
யஷ்பால் சர்மா, 1983இல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பையை இந்தியா வெல்வதில் முக்கிய பங்காற்றினார். அந்த உலகக் கோப்பையில், இந்திய அணி தனது முதல் போட்டியிலேயே உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியை சந்தித்தது. அப்போட்டியில் யஷ்பால் சர்மா 89 ரன்கள் குவித்து இந்தியா வெல்ல காரணமாக அமைந்தார்.
மேலும், அந்த உலகக்கோப்பை தொடரில், இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதியில் யஷ்பால் சர்மா அரை சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்குப் பங்களித்தார். அப்போட்டியில் இந்திய அணி சார்பில் அதிக ரன்களை எடுத்தவர் யஷ்பால் சர்மாதான். யஷ்பால் சர்மா 1982ஆம் ஆண்டு சென்னை டெஸ்ட்டில் அடித்த 140 ரன்கள், இந்திய டெஸ்ட் வரலாற்றின் சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
யஷ்பால் சர்மா மறைவிற்கு கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.