இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸி அணி வெற்றி பெற்றது. நான்காவது போட்டி அஹமதாபாத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 480 ரன்களை குவித்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவக்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மா 35 ரன்களுக்கும் புஜாரா 42 ரன்களுக்கும் ஆட்டமிழக்க தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை சுப்மன் கில் பூர்த்தி செய்தார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 289 ரன்களுடன் 3 விக்கெட்களை இழந்து இருந்தது. நான்காவது நாளான இன்று ஆட்டத்தை துவக்கிய இந்திய அணிக்கு விராட் தூணாக இருந்து ரன்களை சேர்த்தார்.
மறுமுனையில் ஜடேஜா 28 ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும் பின் வந்த கே.எஸ். பரத் விராட் கோலிக்கு உறுதுணையாக ரன்களை சேர்த்த வண்ணம் இருந்தார். கே.எஸ்.பரத் 44 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து வந்த அக்ஸர் படேல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இந்த சமயத்தில் விராட் கோலி 3 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்டில் தனது 28 ஆவது சதத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய அக்ஸர் 79 ரன்களுக்கு ஆட்டமிழக்க பின் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறினர். ஒரு முனையில் இரட்டை சதம் நோக்கி சென்று கொண்டு இருந்த விராட் 186 ரன்களுக்கு அவுட்டானார். விராட் கோலி மற்றும் அக்ஸர் படேலின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 571 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய அணியை விட 91 ரன்கள் முன்னிலை பெற்றது. தற்போது ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.
கோலி டெஸ்ட் போட்டியில் 1205 நாட்களுக்கு பிறகு சதமடித்துள்ளார். 27 ஆவது சதத்திற்கும் 28 ஆவது சதத்திற்கும் இடைப்பட்ட காலங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட்டின் சராசரி 25.70 என்பது மட்டுமே. இருந்தாலும் அனைத்து வகையான போட்டிகளையும் சேர்த்து குறைவான போட்டியில் 75 சதங்கள் அடித்த சாதனையை கோலி படைத்துள்ளார். 75 சதங்களை அடிக்க அவர் 552 போட்டிகளை எடுத்துக் கொண்டுள்ளார். ஆனால் இதுவரை முதல் இடத்தில் இருந்த சச்சின் 75 ஆவது சதத்தினை எட்ட 566 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதன்மூலம், குறைவான போட்டிகளில் விளையாடி 75 சதங்கள் விளாசியதில் சச்சினை பின்னுக்குத் தள்ளி கோலி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.