நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டிகளுக்கு ரோஹித் சர்மா தலைமையில் விளையாடிய இந்திய அணி டி20 தொடருக்கு ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடுகிறது. டி20 போட்டியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒருநாள் தொடரில் நியூசி-யை ஒயிட் வாஷ் செய்த இந்திய அணி தொடரை வென்றது. தொடர்ந்து ஐசிசி பட்டியலிலும் முதல் இடத்தைப் பிடித்தது. இந்நிலையில் இந்தியா - நியூசிலாந்து மோதும் டி20 தொடருக்கான முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும் இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றன.
இந்நிலையில், இன்று அஹமதாபாத்தில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷன் மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். இஷான் கிஷன் 1 ரன்னில் வெளியேற ராகுல் திரிப்பாதியுடன் சுப்மன் கில் இணைந்தார். அதிரடியாக ஆடிய சுப்மன் கில் நியூசிலாந்து பந்துவீச்சை நாலாப்புறமும் சிதறடித்தார். மறுபுறத்தில் திரிப்பாதியும் அடித்து ஆட இந்திய அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.
திரிப்பாதி 44 ரன்களில் ஆட்டமிழக்க சூர்யகுமார் மற்றும் ஹர்திக் பாண்டியா முறையே 24 மற்றும் 30 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து அதிரடி காட்டிய கில் அசத்தலாக சதம் அடித்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 234 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கில் 63 பந்துகளில் 126 ரன்கள் குவித்தார்.
235 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஒற்றை இலக்கில் வெளியேற மிட்செல் மட்டும் பொறுமையாக ஆடி 35 ரன்களை எடுத்தார். பின் வரிசையில் வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் 66 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு எதிராக மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மோசமான சாதனையை பதிவு செய்தது.
சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஷிவம் மாவி தலா இரண்டு விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்த போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்ற சாதனையை படைத்தது. இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு டப்லினில் நடந்த ஆட்டத்தில் 143 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சாதனையாக இருந்தது.
எதிரணியின் மொத்த ரன்களை விட தனிநபர் அதிக ரன்களை அடித்ததில் விராட்டின் சாதனைப் பட்டியலில் கில்லும் இணைந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு துபாயில் நடந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி 111 ரன்களுக்கு சுருட்டியது. அதில் விராட் மட்டும் 122 ரன்களை எடுத்திருந்தார். அதே போல் இன்றைய போட்டியில் நியூசிலாந்து 66 க்கு ஆல் அவுட் ஆனது. ஆனால் கில் 126 ரன்களை எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இந்தப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் தொடரையும் வென்றது. ஆட்டநாயகனாக சதம் அடித்த சுப்மன் கில் தேர்வு செய்யப்பட்டார். தொடர்நாயகனாக ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்பட்டார்.