இலங்கை இந்தியா இடையே இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி!
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்தாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இன்று விளையாடி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. அணியின் கேப்டனாக உபுள் தரங்கா களமிறங்கியுள்ளார். இலங்கை அணி 40 ஓவர்களின் முடிவில் 190 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. முன்னர் பேட்டிங் செய்த தரங்கா மற்றும் திரிமானே முறையே 48 மற்றும் 67 ரன்கள் எடுத்திருந்தனர். ஆஞ்சலோ மேத்யூஸ் 54 ரன்களுடன் விளையாடி வருகிறார்.
ஐந்து ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரில், ஏற்கனவே நான்கு போட்டிகளில் வென்று தொடரையும் தன் வசமாக்கியுள்ளது இந்திய அணி. இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றி பெற்று ஒயிட் வாஷ் ஆகாமல் தவிர்க்கும் முனைப்போடு இலங்கை அணி விளையாடி வருகிறது. இந்தியாவுடனான இந்தத் தொடரில் இலங்கை அணியின் தொடர் தோல்விகளால், அந்த அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் நேரடியாக கலந்துகொள்ளும் வாய்ப்பை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.