மிக்ஜாம் புயலால் சென்னையில் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்த நிலையில், ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கருத்து பதிவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான அளவிற்கு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் பல வாகனங்கள் சேதமடைந்தும், ரயில் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டும் இருக்கின்றன.
தற்போது புயல் கரையைக் கடந்த நிலையில், ஒரு சில இடங்களில் தேங்கிய மழை நீர் வடிந்து வருகிறது. இதனால், சென்னை மாநகரம் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியதாவது, “சென்னையில் பல இடங்கள் வெள்ளத்தால் பாதிப்படைந்துள்ளது. இந்த இயற்கை பேரிடரில் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றித்தான் எனது எண்ணங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தேவைப்பட்டால் உயரமான இடங்களில் பாதுகாப்பாக இருங்கள். நீங்கள் உதவக்கூடிய நிலையில் இருந்தால் நிவாரண முயற்சிகளிலோ அல்லது தேவைப்படுபவர்களுக்கு உதவிகளை செய்ய பரிசீலிக்கவும். நம்மால் முடிந்தவரை ஆதரவளிக்க ஒன்றுபடுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.