கிரிக்கெட் விளையாட்டு போட்டி ஒன்றில் நோ பால் என அம்பயர் கூறியதால் அவரை கொலை செய்த சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள மன்ஹிசாலந்தா என்ற கிராமத்தில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி ஒன்று நடைபெற்றது. அப்போது ஷங்கர்போர் மற்றும் பிரஹ்மபூர் என்ற இரு கிராமத்தை சேர்ந்த அணிகளுக்கிடையேயான போட்டியின் போது அம்பயர் நோ பால் என அறிவித்ததால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.
மேலும் இந்த வாக்குவாதம் தீவிரமானதால் அப்போது பார்வையாளராக இருந்த பிரஹ்மபூர் கிராமத்தைச் சேர்ந்த ஸ்முதி ரஞ்சன் ரெளத் என்கிற முனா என்பவர் அம்பயரான லக்கி ரெளத்தை (வயது 22) தாக்கியிருக்கிறார். இதற்கு பதிலடியாக லக்கியும் ஸ்முதியை பேட்டால் தாக்கியிருக்கிறார். இதையடுத்து மோதல் அதிகரிக்கவே ஸ்முதி ரஞ்சன் தன்னிடம் இருந்த ஆயுதத்தால் அம்பயரை தாக்கி இருக்கிறார். இதில் பலத்த காயமடைந்த லக்கியை அங்கு இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இந்த கொலைக்கு காரணமான ஸ்முதியை அங்கிருந்த கிரிக்கெட் வீரர்கள் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இச்சம்பவம் ஒடிசாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.