கடந்த போட்டியில் தோனியின் ஆட்டம் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு, சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் விளக்கம் அளித்துள்ளார்.
ஷார்ஜாவில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. விறுவிறுப்புகள் நிறைந்த போட்டியில், சென்னை அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. சென்னை அணியின் பந்துவீச்சானது பெரும் சொதப்பலாக அமைந்தது. இறுதிக்கட்ட ஓவர்களை வீசிய சென்னை வீரர்கள் ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக இறுதி ஓவர் வீசிய லுங்கி நெகிடி கடைசி ஓவரில் மட்டும் 30 ரன்களை வழங்கினார். மேலும் இப்போட்டியில், தோனி 7-வது இடத்தில் களமிறங்கியதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளம்மிங் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர், "ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கேள்விகள் எழுகின்றன. அவர் 14-வது ஓவரின் போது களத்தில் இறங்கினார். அது சரியான தருணம். சமீபத்தில் அவர் நிறைய போட்டிகளில் விளையாடவில்லை. அவரது சிறந்த ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அதற்கு சற்று காலம் எடுக்கலாம். டுபிளஸிஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். நாம் எந்த பின்னடைவையும் சந்திக்கவில்லை" எனக்கூறினார்.