இந்திய கிரிக்கெட் அணி, தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒருநாள் போட்டி தொடர் முடிவடைந்த நிலையில், தற்போது இருபது ஓவர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதனைத்தொடர்ந்தது டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய அணி, ஆஸ்திரேலியா ஏ அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர்களான ப்ரித்வி ஷா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். இருப்பினும், ரஹானேவின் அபார சதத்தாலும், புஜாராவின் நிதானமான அரைசதத்தாலும் இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 247 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
இதனைத்தொடர்ந்து, ஆஸ்திரேலியா ஏ அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இருப்பினும் கேமேரான் க்ரீனின் சதத்தின் உதவியோடு இரண்டாம்நாள் ஆட்ட நேர முடிவில் 289 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 39 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கிறிஸ் க்ரீன், 114 ரன்களோடு களத்தில் உள்ளார். இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்து வீசிய உமேஷ் யாதவ், 3 விக்கெட்டுகளையும், சிராஜ் 2 விக்கெட்டுக்களையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.