ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 12,000 ரன்கள் குவித்த வீரர் என்ற சச்சினின் சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையான முதல் இரு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இந்த நிலையில், இன்று மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. 19 ஓவரின் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 96 ரன்கள் குவித்துள்ளது. விராட் கோலி 35 ரன்களுடனும், ஷ்ரேயாஸ் ஐயர் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இப்போட்டியில் தன்னுடைய 23 ரன்களை விராட் கோலி எட்டியபோது, ஒருநாள் போட்டியில் அவர் குவித்த மொத்த ரன்களின் எண்ணிக்கையானது 12,000-ஆக உயர்ந்தது. இதன்மூலம், ஒருநாள் போட்டியில் 12,000 ரன்களை எட்டிய வீரர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி 6-ஆவது வீரராக இணைந்துள்ளார்.
இம்மைல்கல்லை எட்ட சச்சின் 309 போட்டிகள் எடுத்துக்கொண்டநிலையில், விராட் கோலி தன்னுடைய 251-ஆவது போட்டியிலேயே இம்மைல்கல்லை எட்டி, குறைந்த போட்டிகளில் 12,000 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பெற்று, சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.