இதுவென்ன 20 ஓவர் போட்டியா என விராட் கோலியின் கேப்டன்சி செயல்பாடுகள் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 ஒருநாள், 3 இருபது ஓவர்கள், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இரு ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைத் தழுவிய இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்துள்ளது. இரு போட்டிகளிலும் பேட்டிங்கில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, பீல்டிங் மற்றும் பந்துவீச்சில் கோட்டைவிட்டது. மேலும், விராட் கோலின் கேப்டன்சி குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் விராட் கோலியின் கேப்டன்சி குறித்துப் பேசுகையில், "விராட் கோலியின் கேப்டன்சி எனக்குப் புரியவில்லை. ஆஸ்திரேலியா போன்ற சிறந்த பேட்டிங் வரிசை கொண்ட அணியுடன் விளையாடும்போது தொடக்கத்தில் விக்கெட் வீழ்த்துவது எவ்வளவு முக்கியம் என்று நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். அப்படியிருக்கையில் அணியின் முக்கியமான பந்துவீச்சாளரை இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசச்செய்கிறார். பொதுவாக ஒருநாள் போட்டிகளில் 4-3-3 என மூன்று கட்டமாகப் பந்துவீசுவார்கள். இல்லையென்றால் அதிகப்படியாக நான்கு ஓவர்கள் வீசுவார்கள். முக்கியமான பந்துவீச்சாளரை துவக்கக்கட்டத்தில் இரு ஓவர்கள் வீச மட்டுமே பயன்படுத்துவார் என்றால் அது என்ன வகையான கேப்டன்சி என்று எனக்கு புரியவில்லை. இது இருபது ஓவர் போட்டியல்ல. இதற்கான காரணமும் எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் இது மோசமான கேப்டன்சி" எனக் காட்டமாக விமர்சித்தார்.