ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதற்கட்டமாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் தோல்வியடைந்த இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணியிடம் பறிகொடுத்தது.
ஐ.பி.எல் தொடரில், அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்த தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் அறிமுக வீரராகக் களமிறங்கி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இவர் 2017 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில், சேவாக் வழிகாட்டியாகச் செயல்பட்டு வந்த பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்தார். தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகளில் மட்டுமே விளையாடிருந்த நடராஜனை பஞ்சாப் அணி 3 கோடிக்கு ஏலம் எடுத்தது. ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாடாத ஒருவருக்கு, எதற்காக பஞ்சாப் அணி நிர்வாகம் இவ்வளவு பெரிய தொகையைச் செலவழித்தது என்று அப்போது கேள்வியெழுந்தது.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், பஞ்சாப் அணியின் அன்றைய வழிகாட்டியுமான சேவாக் இது குறித்துப் பேசுகையில், "எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. நான் நடராஜனை பஞ்சாப் அணிக்காக தேர்ந்தெடுத்தபோது உள்ளூர்ப் போட்டிகளில் விளையாடாத ஒருவரை எப்படி இவ்வளவு தொகை கொடுத்து ஏலம் எடுத்தீர்கள் என்று என்னிடம் கேட்டார்கள். அவரிடம் திறமை இருந்தது. பணத்தைப் பற்றி நான் கவலைப்படவில்லை. எங்கள் அணியில் இருந்த தமிழக வீரர்கள் அவர் சிறப்பாக பந்து வீசுவார் என்று கூறினார்கள். நான் அவரது ஒரு காணொளியைப் பார்த்தேன். உடனே அவரை ஏலத்தில் எடுக்க முடிவெடுத்தோம்.
துரதிர்ஷ்டவசமாக அந்த ஆண்டு அவருக்குக் காயம் ஏற்பட அவரால் நிறைய போட்டிகளில் விளையாட முடியவில்லை. அந்த ஆண்டு அவர் விளையாடிய போட்டிகளில் மட்டுமே பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. மற்ற போட்டிகளில் நாங்கள் தோல்வியடைந்தோம். அவருக்கு வாய்ப்பு கிடைப்பதைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கு 20 ஓவர் தொடரில் வாய்ப்பு கிடைப்பது குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் அணியில் அவர் விளையாடுவது இன்பஅதிர்ச்சியாக உள்ளது. அவருக்கு வாழ்த்துகள். அவர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் அவருக்கான இடத்தை உருவாக்கிக் கொள்வார் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.