கரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்த சென்னை அணி வீரர் தீபக் சஹார் பயிற்சியைத் தொடங்கினார்.
13-வது ஐபிஎல் தொடர் கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்குப் பின் அமீரகத்தில் வரும் 19-ம் தேதி தொடங்க இருக்கிறது. இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் கடந்த மாதமே அமீரகம் சென்றனர். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த சூழலுக்கு இடையே இத்தொடர் நடைபெறுவதால் பிசிசிஐ கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்தியிருந்தது. அதன்படி அமீரகம் சென்றடையும் வீரர்கள் அங்கு 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பின் அவர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அதில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு நடந்த பரிசோதனையில் சென்னை அணியின் ஒரு பந்து வீச்சாளர், உதவியாளர் உட்பட 13 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
தனிமைக்காலத்தை நிறைவு செய்த சென்னை அணியின் பந்து வீச்சாளர் தீபக் சஹாருக்கு கரோனா பரிசோதனை மீண்டும் செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது உறுதியானது. கரோனா பாதிப்பில் இருந்து முற்றிலும் குணமடைந்ததையடுத்து, அவர் தன்னை பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கக்கோரி பிசிசிஐக்கு கடிதம் ஒன்றினை எழுதினார். தற்போது பிசிசிஐ அனுமதி அளித்ததையடுத்து பிற வீரர்களுடன் இணைந்து தீபக் சஹார் தன்னுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளார்.