சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தனித்துவமான வீரர்கள் வெகுசிலரே. கேரக்டரையே புரிஞ்சிக்க முடியலயே என்ற லெவலுக்குதான் இருக்கும் அவர்களது நடவடிக்கைகள். உண்மையில் அப்படியொரு லிஸ்ட் எடுத்தால், அதில் முதல் இடத்தைப் பிடிப்பவர் நிச்சயம் தோனியாகத்தான் இருப்பார்.
ஒரு போட்டியில் தோல்வியின் விளிம்பை நோக்கி அணி சென்றால், தோனி தன் தொப்பிக்குள் இருந்து முயல்களை எடுத்து வீசவேண்டும்; அதாவது யாரும் எதிர்பார்க்காத ஒரு மிராக்கிலை நிகழ்த்திக்காட்ட வேண்டும் என்று வர்ணனையாளர்கள் பலமுறை சொன்னதுண்டு. தன் மண்டைக்குள் பல்வேறு ஐடியாக்களை யோசித்து வைத்திருக்கும் தோனியிடம், எந்தவொரு ஐடியாவையும் வலிந்து திணித்துவிட முடியாது என்கிறார் அணியின் முன்னாள் தேர்வாளர் சந்திரசேகர். ஒருநாள் விளையாடி முடிந்ததும் என்னோடு பேசவேண்டும் என சந்திரசேகர் கேட்டபோது, எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை எனக்கூறி தவிர்த்துவிட்டாராம். அதேசமயம், தோனியிடம் முடிவு தெரியாத சில ஐடியாக்களை முன்வைத்தால் அதை பரிசீலனை செய்வாராம்.
அதேபோல், பத்திரிகையாளர் பரத் சுந்தரேசன் எழுதியுள்ள தி தோனி டச் என்ற புத்தகம் தோனியின் அணுகுமுறைகள் பற்றியும் பல விஷயங்கள் குறிப்பிட்டுள்ளாராம். குறிப்பாக, 2016ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையின்போது அணியின் கேப்டனை ப்ளேயிங் லெவனை மைக்ரோஃபோனில் வாசிக்கவைக்க ஐசிசி முடிவுசெய்தது. அதைச் செய்யும் முதல் கேப்டன் தோனிதான் என்பதால், அவரிடம் முறையிட்டபோது ‘எதுக்கு தேவையில்லாம?’ எனக்கேட்டு மறுத்துவிட்டாராம். ஐசிசி தனது மிகப்பெரிய திட்டத்தை ஊற்றிமூட வேண்டிய நிலை ஏற்பட்டது என எழுதியிருக்கிறார்.