இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அந்நாட்டு அணியுடன் விளையாடி வருகிறது. ஏற்கெனவே டி20 தொடரில் வெற்றியும், ஒருநாள் தொடரில் தோல்வியும் பெற்றுள்ள இந்திய அணி, தற்போது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
எட்க்பாஸ்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கைத் தேர்வுசெய்தது. மழை காரணமாக இரண்டாம் நாளில் தொடங்கிய போட்டியின் தொடக்கத்திலிருந்தே, இங்கிலாந்து பவுலர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இடையிடையே குறுக்கிடும் மழை, தொடர்ந்து சரியும் விக்கெட் என இந்திய அணிக்கு இறங்குமுகமாகவே இருந்தது.
இரண்டாவது நாளின் இறுதியிலேயே இந்திய அணி 107 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணியின் சார்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இது அவரது 27-ஆவது ஐந்து விக்கெட் சாதனை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய அவர், இந்த சூழலில், இதேபோல் நாங்கள் பந்துவீசினால் உலகில் வேறெந்த டீமாக இருந்தாலும், சுலபமாக வீழ்த்திவிடலாம் என்று நினைக்கிறேன். தொடர்ந்து பேட்ஸ்மெனுக்கு அழுத்தம் தரும்விதமாக சரியான இடத்தில் பந்தை வீசும்போது, இயல்பாகவே விக்கெட்டுகள் வீழ்கின்றன. இது எந்த பேட்ஸ்மெனாக இருந்தாலும் பொருந்தும். நாங்கள் இந்த சூழலை மிகச்சிறப்பாக பயன்படுத்திக் கொண்டோம். அதனால், இந்தியா மட்டுமின்றி எந்த அணியானாலும் இங்கு திணறியிருக்கும்’ என தெரிவித்துள்ளார்.