இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. நாட்டிங்காமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பவுலிங்கைத் தேர்வு செய்தது.
இன்று நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணியின் வீரர்கள் கையில் கறுப்புப் பட்டை அணிந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜிட் வடேகர் மற்றும் முன்னாள் பிரதமர் வாஜ்பாயிக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவர்கள் இதைச் செய்கின்றனர்.
இந்திய அணியின் கேப்டனாக பொறுப்புவகித்த அஜிட் வடேகர், 1971-ஆம் ஆண்டு முதல்முதலாக இந்திய அணியை அந்நிய மண்ணான மேற்கிந்தியத் தீவுகளில் வெற்றிபெறச் செய்தவர். மேற்கிந்தியத் தீவுகள் நாட்டில்தான் இந்திய அணி முதன்முதலாக தொடரில் வெற்றியைப் பதிவுசெய்தது. இவர் கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி காலமானார். அதேபோல், 1999-2004 ஆம் ஆண்டு வரை இந்தியாவில் பிரதமராக பதவிவகித்த அடல் பிகாரி வாஜ்பாய் ஆகஸ்ட் 16-ஆம் தேதி உயிர்நீத்தார். இவ்விருவரின் நினைவைப் பேசும் மற்றும் இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் இந்திய வீரர்கள் கறுப்புப் பட்டையும் களமிறங்கியுள்ளனர்.