பலருக்கும் இருக்கும் சந்தேக வியாதி குறித்து நம்மிடம் மனநல மருத்துவர் பூர்ண சந்திரிகா விளக்குகிறார்.
சந்தேகம் என்பது சிறிய அளவில் ஆரம்பித்து பெரிய விஷயங்களில் வந்து நிற்கும்போது வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும். ஒரு கணவனும் மனைவியும் என்னிடம் வந்தனர். மனைவியோடு அவருடைய குடும்பத்தினரும் வந்திருந்தனர். மனைவியின் குடும்பத்தினர் கணவனை ஒரு கோபத்துடனேயே பார்த்தார்கள். கணவன் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றார். கணவனும் மனைவியும் சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தனர். எதிர்வீட்டில் ஒரு பெண் வாழ்ந்து வந்தார். அவரோடு தன் கணவருக்குத் தொடர்பு இருக்குமோ என்று மனைவி சந்தேகப்பட்டார்.
சில நேரங்களில் சந்தேகம் உண்மையாகிறது. சில நேரங்களில் சந்தேகம் வியாதியாகிறது. கணவர் வெளியே வரும்போது அந்தப் பெண்ணும் சரியாக வெளியே வருவதாக மனைவி கூறினார். விசாரித்தபோது இது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்பது தெரிந்தது. குழந்தைகளையும் இந்த சண்டைக்குள் இழுத்த மனைவி, ஒருகட்டத்தில் சொந்த வீடாக இருந்தாலும் தாங்கள் தங்கி வந்த வீட்டைக் காலி செய்தார். அவர்கள் வாடகை வீட்டுக்குச் சென்றனர். அங்கேயும் இதே போன்ற பிரச்சனைகளை மனைவி கிளப்பினார். மனைவியை கவுன்சிலிங்கிற்கு அழைத்துச் செல்லலாம் என்கிற எண்ணம் கணவருக்கு வந்தது. மனைவியுடைய பெற்றோரும் இதற்கு சம்மதித்து என்னிடம் வந்தனர்.
சந்தேகத்திற்கான காரணங்களைக் கேட்டபோது இருவரும் சொன்ன காரணங்கள் சினிமாவில் வருவது போன்றே இருந்தன. இந்த ஒரு விஷயத்தைத் தவிர இருவரிடமும் வேறு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று அவர்கள் கூறினர். பலருக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறது. இது ஒரு வியாதியா என்பதையும் கண்டறிவது கடினம். தாங்களாகவே கற்பனை செய்துகொண்ட சந்தேகங்களை சிலர் முழுமையாக நம்புவார்கள். சிலருக்கு காதுக்குள் ஒரு குரல் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். இதற்கான மருந்துகளும் தெரபிகளும் இருக்கின்றன. அவற்றை எடுத்துக்கொண்ட பிறகு இந்த சிந்தனைகள் அவர்களுக்குக் குறையும். இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் சிகிச்சைக்கு வருவது நல்லது.