'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு மருத்துவர் அருணாச்சலம் நேர்காணல் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "வேர்வையுடன் வரக்கூடிய நெஞ்சு வலியும், வாந்தியுடன் வரக் கூடிய நெஞ்சு வலியும் ஹார்ட் அட்டாக் இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளது. வயிற்று வலிக்கு மாத்திரை போட்டும் குணமடையவில்லை என்றால், உடனடியாக இசிஜி எடுத்துப் பார்ப்பது நல்லது. ஒரு நாளைக்கு 20 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்கின்றனர் கார்டியாலஜி மருத்துவர்கள். வாரத்தில் கடைசி நாட்களில் சுமார் ஒன்றரை மணி நேரம் உடற்பயிற்சி செய்தாலே இருதயம் பாதுகாப்பாக இருக்கும்.
பொதுவாக, மூச்சு இரைக்க ஒருநாளைக்கு ஒரு முறையாவது ஓடாமலோ, உடற்பயிற்சி செய்யாமலோ இருக்கக் கூடாது. கால் மசுல்ஸ்கள் நன்றாக வேலை செய்யும் வகையில் சைக்கிளிங், நீச்சல் செய்ய வேண்டும். கால் மசுல்ஸ்கள் நன்றாகவும், வேகமாகவும் பம்ப் செய்யப்படும் போது அந்த ரத்தம் நமது உடலில் மூளைக்கும் இருதயத்துக்கும் போகும் போது அங்கு படரக் கூடிய கொழுப்பு கூட படர விடாமல் பார்த்துக் கொள்ளும்.
ரத்தம் குறைவான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் ரத்தக் குழாய்களில் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் ரத்தத்தை வேகமாக செல்ல வைத்தால் இந்த ஹார்ட் அட்டாக் வராது என்பது தான் உண்மை. ஹார்ட் அட்டாக் வந்ததாக உணர்ந்தால் நன்றாக இருமுவதும் நன்றாக தண்ணீர் குடிப்பதும் உதவியாக இருக்கும். ஜிம்முக்கு செல்வதற்கு முன் உடல் பரிசோதனை மேற்கொண்டு, பின்னர் மருத்துவரை அணுக வேண்டும். அவர் வழங்கும் அறிவுறுத்தல்களின் பேரில் ஜிம்முக்கு போகலாமா, வேண்டாமா என்ற முடிவை எடுக்கலாம்." இவ்வாறு மருத்துவர் கூறினார்.