Skip to main content

குழந்தையின்மை பிரச்சனைக்கு தீர்வு இதுதான் - சித்த மருத்துவர் அருண் விளக்கம்

Published on 17/10/2023 | Edited on 17/10/2023

 

 Siddha Dr. Arun  - infertility 

 

குழந்தையின்மை பிரச்சனைக்கு  தீர்வினையும், பின்பற்ற வேண்டிய சில விசயங்களையும்  சித்த மருத்துவர் அருண் விளக்குகிறார்

 

குழந்தை பெற்றுக் கொள்ளுதல் என்பது மிகவும் இயல்பான விசயமாக இருந்த தலைமுறையில் இருந்து வந்தவர்கள் நாம். குறைந்த பட்சம் ஒரு குடும்பத்தில் 5 முதல் 10 குழந்தைகள் பெற்றிருந்தார்கள். ஆனால் இன்றோ திருமணத்திற்கு முன்பே குழந்தை பெறும் வாய்ப்பு இருக்கிறதா என்று யோசிக்கும் அளவிற்கான அழுத்தத்தை இந்த சமூகம் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. கருத்தரித்தல் மையம் என்பது எதாவது ஒரு மாவட்டத்தில் இருக்கும்; இப்போது மாவட்டத்திற்கு 5 என்று பெருகி இருக்கிறது. 

 

எல்லா உயிரினங்களிலும் குழந்தைப் பேறு என்பது மிகவும் சாதாரண விசயமாக இருக்கும் போது, மனிதருக்கு மட்டும் ஏன், இது நோய் போல மாற்றப்பட்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். கல்யாணமாகிடுச்சே எதுவும் விசேசமில்லையா என்று அடுத்தடுத்த கேள்விகளால் தடுமாறுகிற இளைய தலைமுறை இதற்கு ஒரு முறை சிகிச்சைக்கு சென்று விடுவோமா என்கிற அளவுக்கு அழுத்தத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.

 

நமது உணவு, உடை, கலாச்சாரம் எல்லாம் மாறியிருக்கும் போது நமது உடலிலும் மாற்றங்கள் ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதற்கு லட்சக்கணக்கில் தான் செலவு செய்து சிகிச்சை எடுக்க வேண்டுமா என்று கேட்டால் பதில் இல்லை என்பது தான். சித்தமருத்துவ முறைப்படி சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது ஒரு வருடத்தில் குழந்தை பாக்கியத்தை பெற்றிருக்கிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்ட விசயம். செலவு இதில் பெருசாக ஒன்றும் ஆகாது. சித்த மருத்துவமுறைப்படி உணவில் பெரிய மாற்றத்தையும், பழக்கவழக்கங்களில் சில திருத்தங்களையும் கொண்டு வருவோம். 

 

பஞ்சபூதங்களோடு நேரடியான தொடர்புடைய வாழ்வியலை மீட்டு உருவாக்க வேண்டும். மண் பானையைப் பயன்படுத்தி தண்ணீர் குடித்தோம். மண் பாத்திரங்களில் சமைத்தோம். அதை மீண்டும் செய்யுமாறு சித்த மருத்துவத்தில் வலியுறுத்துவோம். நிலத்தில் ஏதாவது விளைய வேண்டுமென்றால் மண் நன்றாக இருக்க வேண்டும். அதே போல கருவில் உயிர் உருவாக உடலும் மண்ணோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும். ஆரோக்கியமாக எளிதில் கிடைக்கக் கூடிய நாட்டு காய்கறிகள், அசைவப்பிரியர்கள் ஆட்டுக்கறி, கோழிக்கறியை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். கீரை வகைகள், முளைக்கட்டிய பயிர்கள், சோற்றுக் கற்றாழையை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனால் கருப்பையில் ஏதேனும் சிக்கல் இருக்கும் பட்சத்தில் சரி செய்யும். எண்ணை தேய்த்து குளிக்கும் பழக்கத்தினை கொண்டு வர வேண்டும். உடல் சூடு இயல்பாக இருந்தால் கரு உற்பத்தி இயல்புநிலைக்கு வந்து விடும்.  உயிர் உருவாகுதல் நடைபெறும்.