பல்வேறு டயட் முறைகள் குறித்து நமக்கு விளக்கி வரும் ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா வாரியர் டயட் குறித்து இப்போது விளக்குகிறார்.
வாரியர் டயட் மூலம் மஞ்சு வாரியர் போல் இளமையாக இருக்கலாம். அந்தக் காலத்தில் போரில் ஈடுபட்ட வீரர்கள் பகல் முழுக்க போரில் ஈடுபட்டு இரவு நேரத்தில் சமைத்து நன்கு சாப்பிடுவார்கள். இப்படி சாப்பிட்டு வந்தவர்கள் அதிக எனர்ஜியோடு இருந்து வந்தனர். ஆதிவாசிகளும் பகல் முழுவதும் வேட்டையாடிவிட்டு, உணவை சேகரித்து, இரவு நேரத்தில் சாப்பிடுவார்கள். பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்தாலும் இவர்களுக்கு அதிக எனர்ஜி இருப்பதற்குக் காரணம், இரவில் அவர்கள் எடுக்கும் புரோட்டின் உணவுகள் தான். இரவில் அவர்கள் வயிறு நிரம்பும் வரை சாப்பிடுகிறார்கள்.
ஒரு காலத்தில் இதுதான் வாழ்க்கை முறையாக இருந்தது. அப்படி உருவானது தான் வாரியர் டயட். ரம்ஜான் விரதமும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒரு உணவு முறைதான். அவர்கள் பகல் முழுவதும் சாப்பிடாமல் இருந்துவிட்டு இரவில் மட்டும் சாப்பிடுகிறார்கள். இப்போது நாம் பணத்துக்கான வேட்டையில் தான் அதிகம் ஈடுபடுகிறோம். அந்த நேரத்தில் வெறும் வயிற்றுடன் இருந்தால் மூளை நன்கு வேலை செய்யும். இந்த வாரியர் டயட் உணவு முறையில் உடல் நன்கு சுத்தமாகி விடும். அரபு நாடுகளில் ரம்ஜான் நோன்பு இருப்பதால் அங்கு கேன்சர் நோய் குறைவாக இருக்கிறது என்று நான் படித்திருக்கிறேன்.
ஒரு நாளைக்கு ஒருமுறை உண்ணும் இந்த உணவு முறையில் நம்மால் இளமையாக மாற முடியும். உடல் எடையையும் நம்மால் குறைக்க முடியும். மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையோடு தான் இதைப் பின்பற்ற வேண்டும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த உணவு முறையைப் பின்பற்றுவது நல்லது. எந்த உணவு முறையாக இருந்தாலும் அதற்கு மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம். எந்த உணவு முறையிலும் உடல் எடையைக் குறைக்க முடியாதவர்களுக்கு வாரியர் டயட் நிச்சயம் உதவும்.