கலைஞரும் ஆசிரியரும்
அண்ணாவிடம் பயின்ற கலைஞரிடமும் அந்த அருங்குணம் இல்லாமல் போய்விடுமா?
கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மாநாடு திருவாரூரில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றினார் கலைஞர். அப்போது முதல்வர் கலைஞரின் கண்கள் தன் ஆசிரியரைத் தேடின. அவர் வந்திருக்கிறாரா என்று மாநாட்டாளர்களிடம் கேட்டார். ஓய்வு பெற்றுவிட்டதாகச் சொன்னார்கள். "ஓய்வு பெற்றால் அதோடு சரியென்று விட்டு விடலாமா? அழைத்து மரியாதை செய்யக்கூடாதா?' என்று கேட்டார்.
உதவியாளர்களிடமும் தென்னன் என்னும் உயிர் நண்பரிடமும், "போகும் போது, சேதுராமய்யர் வீட்டுக்குப் போவோம்' என்று சொல்லிவைத்தார். அவ்வாறே சென்றார்கள். காவலர் கள் மற்றும் உதவியாளர்கள் என்று திடீரென்று போனதும், சுவாமி மடத் தெருவிலிருந்த ஆசிரியப் பெருமகனார் சேதுராமய்யர் திகைத்துவிட்டார்.
கட்டுரை ஏடுகளைக் கொடுக்க ஆசிரியர் வீட்டுக்குப் போன கதையை யும் அப்போது அவர் ஏழாம் வகுப்புப் படித்ததையும், ஆசிரியர் துணைவியார் கொடுத்த காப்பியையும் அது போன்ற நல்ல காப்பியை முதன் முதலாகத்தான் அந்த அம்மையார் கையால் வாங்கி அருந்தியதையும் நினைவுகூர்ந்தார். ஆசிரியர் குடும்பத்துக்குச் செய்ய வேண்டிய நன்மைகளைத் தானே ஆராய்ந்து உதவினார் என்பது கூடுதல் செய்தியாகும்.
இவ்வாறு, பெரும்பதவியில் இருப்பவர்களும், தங்கள் தொடக்கப்பள்ளி உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களைப் போற்றி வணங்கும் பெருமைக்குரிய பணி ஆசிரியப் பணியாகும். ஆசிரியர்களுக்கு இவ்வாறாக மதிப்பு கிடைக்கக் காரணம் என்ன? "எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்' என்கிறார்கள்.ஆசிரியர்கள் பணம் படைத்தவர் களாக இருக்கமாட்டார்கள். ஆனால் நல்ல குணம் படைத்தவர்களாக இருப்பார்கள்.நல்லதை நமக்குக் கற்பித்தவர்கள் ஆசிரியர்களே, வெறும் அறிவை மட்டும் வளர்ப்பவர்கள் அல்லர் அவர்கள். வாழும் வகையுணர்ந்து சமுதாயத்துக்கு உதவும் சீர்மிகு மனிதனாக நம்மை உயர்த்தும் பெருமைக்குரியவர்களும் அவர்களே.
திருவாரூர் இரெ. சண்முகவடிவேல்