இதய செயலிழப்பு என்பது இளம் வயதிலேயே சிலருக்கு ஏற்பட்டு உயிரிழப்பதைப் பார்க்க முடிகிறது. இது எதனால் ஏற்படுகிறது இதன் காரணம் என்னவென்று தெரிந்துகொள்ள இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். சுரேஷ் ராவ் அவர்களை ‘நக்கீரன் நலம்’ யூடியூப் சார்பாக சந்தித்தோம். அவரிடம் மேற்குறிப்பிட்டவை பற்றிய கேள்விகளை முன்வைத்தபோது அவர் அளித்த விளக்கம் பின்வருமாறு.
இதய செயலிழப்பு ஏற்பட பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமாக அதிகமாக புகைப் பழக்கம் இருப்பவர்களுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. டயாப்பட்டீஸ் என்னும் சர்க்கரைப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இதயத்தின் உட்பகுதிகளில் இரத்த உறைவு ஏற்பட்டு இதய செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஹைப்பர் டென்சன் எனப்படும் இரத்த அழுத்தம் அதிகரிப்பு ஏற்பட்டாலும் ஹார்ட் ஃபெயிலியர் ஏற்படும்.
உடற் பருமன் சிக்கல் உள்ளவர்களுக்கும், அதிகப்படியான கொலஸ்ட்ரால் தன்மையினாலும் இதயம் செயலிழப்பு ஏற்படும். பாரம்பரியமாக குடும்பங்களில் யாருக்கேனும் இப்படி ஏற்பட்டிருந்தால் ஜீன் வழியாகவும் ஒரு சிலருக்கு ஹார்ட் ஃபெயிலியர் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. அதாவது பரம்பரை பரம்பரையாக ஹார்ட் ஃபெயிலியர் சிக்கல் இருந்து வந்தாலும் அது அடுத்த தலைமுறையையும் பாதிப்பை ஏற்படுத்தும்.