ஹிப்னாடிசம் பற்றி பேசும்போதே உங்களுக்கு நினைவுக்கு வரும் இன்னொரு வார்த்தை மெஸ்மரிசம். இது இரண்டும் ஒன்றுதான் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். உண்மையிலேயே இவை இரண்டும் ஒன்றுதானா? மக்களின் புரிதல் சரியா? ஹிப்னோதெரபி நிபுணர் டாக்டர் கபிலன் விளக்குகிறார்.
மெஸ்மரிசம் என்றால் என்னவென்று ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மருத்துவர் பிரான்ஸ் ஆன்டன் மெஸ்மர், மனிதர்களின் உடலில் காந்த சக்தி ஒன்று இருப்பதாகவும், அந்த சக்தி குறையும்போது மனிதனுக்கு பல்வேறு உடல்ரீதியான, மனரீதியான பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்றும் நிறுவினார். காந்த சக்தி அதிகம் உள்ள நபர், காந்த சக்தி குறைவாக இருக்கும் நபர் மீது அந்த சக்தியை செலுத்தும்போது அவருடைய பிரச்சனைகள் சரியாகின்றன என்கிறார். இதை அவர் மருத்துவ ரீதியாகவும் உறுதி செய்தார்.
மெஸ்மரிசம் செய்ய மூச்சு மிகவும் அவசியம். அதன் மூலமாகவே காந்த சக்தி செலுத்தப்பட்டது. கைகள் மற்றும் கண்களின் மூலமாகவும் காந்த சக்தியை அவர் செலுத்தினார். பார்ப்பவர்களுக்கு இது ஒரு மேஜிக் ஷோ போல தென்பட்டது. எந்த ஒரு புது விஷயத்திற்குமே இருவேறு வகையில் எதிர்வினைகள் வரும். அதைப்போலவே இவருக்கும் ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் வந்தன.
கைகள், கண்கள் மூலமாக காந்த சக்தியைப் பயன்படுத்தி ஒருவரை ஆழ்நிலைக்குக் கொண்டு செல்வதே மெஸ்மரிசம். வாய் வார்த்தைகளின் மூலமாகவே ஒருவரை ஆழ்நிலைக்குக் கொண்டு செல்வது ஹிப்னாடிசம். ஒருவரை மெஸ்மரிச நிலைக்குக் கொண்டு சென்றவுடன் அவரது உடல் மரத்துப் போவதால் மெஸ்மரிசத்தை மருத்துவர்கள் அதிக அளவில் பயன்படுத்தினர். நோயாளியை மயக்க நிலைக்குக் கொண்டு செல்ல இந்த முறை பயன்படுத்தப்பட்டது. இது அறுவை சிகிச்சையிலும் பயன்படுத்தப்பட்டது.
மெஸ்மரிச மாணவர்கள் இந்தக் கலையை மேடை நிகழ்ச்சிகளாக அரங்கேற்ற ஆரம்பித்தனர். இதன் பிறகு டாக்டர் ஜேம்ஸ் பிராய்டு இது குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார். காந்த சக்தி மூலமாக மட்டுமல்லாமல் வாய் வார்த்தைகளின் மூலமாகவே ஒருவரை ஆழ்நிலைக்குக் கொண்டு செல்லலாம் என்பதை அவர் கண்டறிந்தார். மெஸ்மரிசத்தை அறிவியல் ரீதியாக யாராலும் நிறுவ முடியவில்லை. எனவே, அதன் வடிவத்தை சிறிது மாற்றி ஹிப்னாடிசத்தை அறிமுகப்படுத்தினார் டாக்டர் ஜேம்ஸ் பிராய்டு. மெஸ்மரிசத்தில் இருந்து வந்தது தான் ஹிப்னாடிசம் என்பதாலேயே இரண்டையும் ஒன்றாக இணைத்து மக்கள் எப்போதும் புரிந்துகொள்கின்றனர்.