கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் அவற்றை சரி செய்துகொள்ள வேண்டிய தீர்வுகள் குறித்தும் பிரபல கண் மருத்துவர் கல்பனா சுரேஷ் அவர்களிடம் நக்கீரன் நலம் யூடியூப் சார்பாக சில கேள்விகளை முன் வைத்தோம். அதற்கு அவர் அளித்த அறிவியல் பூர்வமான விளக்கத்தினை பின்வருமாறு காணலாம்.
கண்ணாடி போடப் பிடிக்கவில்லை என்றால் வேறு வழியிலான தீர்வு முறைகள் எல்லாம் உள்ளது. கான்டாக்ட் லென்ஸ். அதை கருவிழி மேல் ஒட்டுவது. அது நிரந்தமாக ஒட்டிக் கொள்வது இல்லை. தினமும் போட்டுக் கொள்ளலாம். சுத்தம் செய்யலாம், பிறகு போட்டுக் கொள்ளலாம். எட்டு மணி நேரம் வரை கண்களில் வைத்துக் கொள்ளலாம். அது கண்ணாடி போட விரும்பாதவர்களுக்கு மட்டும்.
இளம் வயதினராக இருந்தால் லேசர் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யலாம். அது நிரந்தரமானது. ஆனால், கண்ணாடியே போட வேண்டிய சூழல் ஏற்பட்டு விடாது என்பதை உறுதியாக மருத்துவர்கள் சொல்லமாட்டார்கள். ஏனெனில் நாற்பது வயதிற்கு மேல் கிட்டப்பார்வை குறையும். அது அனைவருக்கும் முதுமையினால் வரக்கூடியதே. அதற்கு முன்னால் கண்பார்வை குறைபாடு ஏற்பட்டால் இளம் வயதில் லேசர் சிகிச்சை செய்து சரி செய்யலாம்.
கண்ணாடியே போடமாட்டேன் என்று அடம்பிடித்தால் கண் மிகவும் கடினமாக பாதிக்கப்படும். தலைவலி, கண் கட்டி ஏற்படும். வாகனம் ஓட்டுபவர்களுக்கு தூரத்தில் வருகிற வாகனங்கள் தெரியாமல் போகும். டிவி பார்க்கும் போது தெளிவாக தெரியாது. திரையரங்குகளில் படம் தெரியாது.
டிஜிட்டல் திரைகளில் கவனம் செலுத்தி அதிக நேரம் வேலை செய்பவர்கள் கண்ணாடி கண்டிப்பாக போட்டுக் கொள்ள வேண்டும். இல்லையெனில் லேசர் சிகிச்சையாவது எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணாடி போடாமல் இருப்பது எந்த விதத்திலும் பயன் தராது. கண்ணாடி போட்டுக் கொள்ளுங்கள்.