நக்கீரன் நலம் யூடியூப் சேனலுக்காக இரைப்பை குடல் சிறப்பு மருத்துவர் கண்ணன் அவர்களை சந்தித்தோம். அப்போது வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் சம்பந்தமான கேள்விகளை முன்வைத்தோம். அதற்கு அவர் அளித்த பதில்கள் பின்வருமாறு...
மூன்று வகைகளில் வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரி செய்ய வேண்டும். அந்த துறையில் சிறந்து விளங்கும் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். உணவு முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படி செய்தால் வாயுத்தொல்லை, நெஞ்செரிச்சல் பிரச்சனையிலிருந்து நிரந்தரத் தீர்வை நோக்கிச் செல்ல முடியும். உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மாற்றத்திற்கு சில டிப்ஸ்...
சரியான நேரத்தில் சாப்பிட்டுவிட வேண்டும். நேரம் தவறி சாப்பிடக்கூடாது. பட்டினியாகவும் கிடக்க கூடாது. உணவு நன்றாக இருக்கிறது என்று அதிகமாகவும் எடுத்துக் கொள்ள கூடாது. குறைந்த அளவில் சரிவிகிதத்தோடு எடுத்துக்கொள்ள வேண்டும். தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு கிலோகிராம் உடல் எடைக்கு 50 மில்லி லிட்டர் குடிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக 60 கிலோ உடல் எடை கொண்டவர்கள் ஒரு நாளைக்கு மூன்று லிட்டர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். அப்போது தான் உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும்.
கோபப்படக்கூடாது, அவசரப்படக்கூடாது, டென்சன் ஆகக்கூடாது, உணர்ச்சி வசப்படக்கூடாது இது போன்ற மன அழுத்தங்கள் உங்களுக்கு வயிற்றெரிச்சலை உண்டு பண்ணும் . அதைத் தவிர்க்க யோகா, தியானம் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும். நல்ல ஆழ்ந்த தூக்கம் வேண்டும். ஆறு மணி நேரம் கண்டிப்பாகத் தூங்க வேண்டும். அதிகமாக எண்ணெய் பயன்படுத்திய; அதிக மசாலா பயன்படுத்திய காரமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஃபாஸ்ட்ஃபுட், ஜங்க் ஃபுட்களை தவிர்க்க வேண்டும்.
ரொம்ப சூடாகவும், ரொம்ப கூலாகவும் சாப்பிடக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களைத் தவிர்க்க வேண்டும். உடலுக்கு இறுக்கமான ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். புகைபிடிப்பதை, மது அருந்துவதைத் தவிர்க்க வேண்டும். தூங்குவதற்கு இரண்டு மணிநேரத்திற்கு முன்பே சாப்பிடவும். உணவை மென்று விழுங்க வேண்டும். வயிற்றிற்கு வேலையைக் குறைவாகக் கொடுத்து வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து சரி செய்து கொள்ளலாம்.