'நக்கீரன் 360' யூ-டியூப் சேனலுக்கு பழம்பெரும் புகைப்படக் கலைஞர் வி.கே.எம். மணி அவர்களை நேரில் சந்தித்தோம். அவர் கூறியதாவது, "சிறிய வயதில் இருந்தே போட்டோகிராஃபி மீது ஒரு காதல் இருந்தது. அதனால் தான் ஓய்வின்றி போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறேன். எந்த நேரத்திலும், தூக்கத்தில் எழுப்பினாலும் நான் போட்டோ எடுக்கத் தயாராக இருக்கிறேன். குரூப் போட்டோ எல்லாம் ஸ்லைட் போட்டு தான் எடுப்போம்.
போட்டோகிராஃபியில் பிளாக் அன்ட் ஒயிட்டில் நல்ல பணம் சம்பாதித்தேன். பிளாக் அன்ட் ஒயிட்டில் ஒரு புகைப்படத்திற்கு சுமார் ரூபாய் 25 வரை வாங்கியிருக்கிறேன். வீட்டிலேயே பிரிண்ட் போடுவோம். புகைப்படம் மற்றும் வீடியோ கவரேஜ் ஆகியவைக்கு சேர்த்து ரூபாய் 60,000 முதல் ரூபாய் 70,000 வரை கொடுக்கலாம். வெண்ணிற ஆடை திரைப்படத்தில் இருந்தே ஜெயலலிதாவை படம் எடுத்திருக்கிறேன். ஆழ்வார்பேட்டைக்கு அருகில் ஒரு விநாயகர் கோயில் இருக்கும். அந்தக் கோயிலுக்கு வந்து ஜெயலலிதா சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்வார். அவரின் தாயையும் புகைப்படம் எடுத்திருக்கிறேன். அவரையும் நன்றாகத் தெரியும்.
கலைஞர் மட்டும்தான் மின்சார வாரியத்தில் புகைப்படக் கலைஞர்களை அனுமதித்தார். அதற்கு பின் ஜெயலலிதா கூட அனுமதிக்கவில்லை. திறந்த வெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மட்டும் புகைப்படங்களை எடுப்போம். தலைமைச் செயலகத்தில் நடக்கும் மின்சார வாரியக் கூட்டத்தில் எங்களை யாரும் அனுமதிக்கவில்லை. ஆனால் கலைஞர் அப்படி இல்லை. நீங்கள் தான் புகைப்படங்களை எடுக்க வேண்டும் என்றார்.
மின்சார வாரியத்தின் 50 ஆம் ஆண்டு பொன்விழாவையொட்டி, ஓய்வு பெற்ற பிறகும் பணியாற்றிய தனக்கு ரூபாய் 10,000- க்கான காசோலை மற்றும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது" எனத் தெரிவித்தார்.