மனிதர்களின் உளவியல் செயல்பாடு குறித்த பல்வேறு கருத்துக்களை நம்மோடு ஹிப்னோதெரபிஸ்ட் கபிலன் பகிர்ந்து கொள்கிறார்.
இஎஸ்பி (எக்ஸ்ட்ரா சென்சரி பெர்சப்ஷன்) என்கிற புலன் கடந்த உணர்வை விஞ்ஞானப்பூர்வமாக நிரூபிக்க முடியுமா என்று பலர் கேட்கின்றனர். இதில் நிறைய குழப்பங்கள் இருக்கின்றன. எவ்வளவு பரிசோதனைகள் செய்தாலும் மக்கள் தங்களுக்கு ஏற்றவாறு அதைப் புரிந்து கொள்கின்றனர். இதனால் சரியான முடிவுகளை நம்மால் எட்ட முடியவில்லை. மனிதர்களை வைத்து நடத்தப்படும் எந்த ஆராய்ச்சியிலும் ஒரே மாதிரி ரிசல்ட்டுகள் கிடைப்பதில்லை. அது உடல் சார்ந்ததாக இருந்தாலும் சரி, மனம் சார்ந்ததாக இருந்தாலும் சரி. ஒரு நபருக்கு இஎஸ்பி இருக்கிறது என்று முடிவு செய்த பிறகு, அதே நபருக்கு அடுத்த நாள் ரிசல்ட் வேறு மாதிரியாக இருக்கிறது.
ஆராய்ச்சியின் போது பங்கேற்பவரின் மனநிலை என்பது மிகவும் முக்கியம். அறிவியல் ரீதியான கருவிகளை வைத்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான சரியான வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான ஆராய்ச்சியை மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்களுக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று நம்புபவர்களையும், தங்களுக்கு ஏதோ ஒரு மனநோய் இருக்கிறது என்று நம்புபவர்களையும் வைத்து ஆராய்ச்சியை மேற்கொள்வார்கள்.
அனைவருக்கும் இஎஸ்பி திறன் இருக்கிறது. ஆனால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு சக்திகள் பெற்ற மனிதர்கள் பலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. சாதாரண மனிதர்கள் போல் தான் அவர்கள் இருக்கிறார்கள். இதனால் அவர்களை ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்த முடிவதில்லை. எனவே இதில் நம்பிக்கை இருப்பவர்கள் இப்படி ஒரு சக்தி இருப்பதை நம்புகிறார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் நிராகரிக்கிறார்கள். உண்மை என்று எதுவுமே கிடையாது. மனிதர்களின் பார்வைகளுக்கு ஏற்ப உண்மைகள் மாறுபடுகின்றன.