உளவியல் தன்மை கொண்ட பல்வேறு வகையான தகவல்களைப் பிரபல மனநல மருத்துவர் ராதிகா முருகேசன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார். அந்த வகையில் திருமணம் மீறிய உறவு குறித்து விளக்குகிறார்.
பெண் வழி சமூகத்தை விட ஆண் வழி சமூகத்தில் தான் திருமணம் மீறிய உறவில் அதிகமாக இருக்கிறார்கள். சீனாவில் கூட குறிப்பிட்ட ஒரு ஊரில் ஆண் தான் தனக்கு பிடித்த பெண்ணுடன் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள். திருமணம் என்கிற சடங்கு அங்கு இல்லை. பிடிக்கவில்லை என்று பிரிந்தாலும் அவர்களது குழந்தைகளை அந்த பெண்ணே வளர்ப்பாள். இப்படி தாய், பாட்டி என்று பொறுப்பை அவர்கள் எடுப்பதினால் அங்கே பாலியல் வன்புணர்வு கிடையாது. மேலும் அங்கு பெண்களுக்கு அதிகாரம் மேலோங்கி இருக்கும்.
ஆனால் இங்கிருக்கும் சமூகத்தினால் ஒரு பெண் தனக்கு ஏற்படும் சமூக அழுத்தத்தின் காரணமாக தனக்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் முடிவை அவள் மாற்றிக்கொள்ளும்படி இருக்கிறது. இதுவே தொடர்ச்சியாக தன்னை சமூகம் செல்லாததாக ஆக்கும்போது, இங்கிருந்து அவள் வேறொரு பாதையை தேர்ந்தெடுக்கும்படி இருக்கிறது. இயல்பாக காதல் தோல்வி என்று வரும்போது இளம் வயதுக்காரர்களிடம் காட்டும் பரிவு கூட திருமணத்திற்கு பின் வைத்திருக்கும் உறவில் தோல்வி வரும்போது காட்டுவதில்லை. ஆனால் நிஜத்தில் அதுதான் கூடுதல் வலியை கொடுக்கும். இவர்கள் பெரும்பாலும் திருமணம் ஆன உறவையும் விடாமல், புதிய உறவையும் விடாமல் தொடரவே நினைப்பார்கள். வீட்டிற்கு தெரியும் பட்சத்தில் மட்டுமே துண்டிக்க முனைவார்கள். அந்த சூழ்நிலையிலிருந்து அவர்களை தீவிர சிகிச்சை மூலமே கொண்டு வரவேண்டி இருக்கும். அப்படி வந்த பின்னும் அவர்களால் அந்த உறவை தொடர்வது என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது.
விவாகரத்து ஆனவர்களுக்கு மீண்டும் ஒரு நம்பிக்கையான உறவை அவர்கள் தொடர இது இன்னும் சிரமமாக இருக்கும். மறுபுறம், தன்னுடய பார்ட்னர் இன்னொரு உறவில் இருக்கிறார் என்று தெரிய வரும்போது அது அவர்களுக்கு வேறு விதமான மன பாதிப்பை கொடுக்கும். ஒரு திருமண உறவில் காதல் இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால் மரியாதையும், நம்பிக்கையும் எப்போதும் இருக்கவேண்டியது அவசியம். ஏனெனில் ஒருமுறை சந்தேகம் என்று வந்துவிட்டது என்றால் அது உறவை தாண்டி அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும். இதுவே ஓபன் ரிலேஷன்ஷிப்பாக இருந்தால் கூட, தன் பார்ட்னர் இன்னொரு உறவில் இருக்கிறார் என்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. அடுத்து இன்செக்யூரிட்டி என்று வரும்போது தான் விரும்பும் ஆள் தன்னிடம் மட்டுமே அன்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பது இயல்பு தான். அதுவே எல்லை மீறிப் போகும்போது தான் தன்னை மீறி ஒருவனையோ ஒருத்தியையோ பார்த்து விடுவாளா என்று போகும்போது தான் இன்செக்யூரிட்டியில் அளவுக்கதிகமான பொசசிவ்னஸ் என்றாகிறது.
ஆரம்பத்தில் அவர்கள் உறவுக்கு இது எக்ஸ்ட்ரா த்ரில்லிங்காக இருந்தாலும் அதுவே எல்லை தாண்டி போகும்போது பொறாமையை தாண்டி சந்தேகம் என்று மாறி ஆரோக்கியமற்ற உறவாகிறது. இதிலிருந்து வெளியே வர முதலில் தன்னுடைய துணையுடன் நேர்மையாக இருப்பதை விட தனக்கு முதலில் செல்ப் வேல்யூ கொடுக்க வேண்டும். நான் என் பார்ட்னருக்கு துரோகம் செய்துவிட்டேன் என்ற காரணத்தினால் மட்டும் மணமுறிவு வாங்காமல், என்னால் இருக்கும் இந்த உறவில் கமிட்மெண்ட்டோடு தொடர முடியவில்லை என்று மணமுறிவு வாங்குவது நன்று. அதற்கு பின் வரும் புது உறவு தன்னுடைய குழந்தைகளை, நம்முடைய மன ஆரோக்கியத்தை, சமூகம் என்று அத்தனையும் விட இந்த உறவு அவசியமா என்று மதிப்பீட்டு பார்க்கவேண்டும். மேலும் தங்கள் துணையின் உணர்வுகளையும் புரிந்து கொண்டு, எப்படி இதை கையாளலாம் என்று விவாதித்தலே தீர்வாக அமையும்.