உணவுப் பழக்க மாற்றங்களாலும் உடற்பயிற்சி இன்மையாலும் கண்ணில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண் சிறப்பு மருத்துவர் டாக்டர் சசிகுமார் விளக்குகிறார்.
கடைகளில் உணவு கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதில் செயற்கை அமிலங்களை சேர்ப்பார்கள். உணவில் கிருமிகளைக் கொல்வதற்காக சேர்க்கப்படும் இவை நம்முடைய உடலில் உள்ள நல்ல கிருமிகளையும் கொன்றுவிடுகின்றன. இதனால் நமக்கு செரிமானத்தில் கோளாறு ஏற்படலாம். பாட்டிலில் அடைக்கப்பட்ட ஊறுகாய், உணவு வகைகள் ஆகியவை உடலுக்கு நல்லதல்ல. ஃபிரிட்ஜில் வைத்து உண்பதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும். சிப்ஸ் வகைகள், பாட்டில் ஜூஸ்கள் ஆகியவையும் உடலுக்கு நல்லதல்ல. அதிக இனிப்புகளையும் முடிந்த அளவு தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோய் அதிகம் உள்ளவர்களின் பட்டியலில் இந்தியா எப்போதும் முதலிடத்தில் இருக்கிறது. ஐஸ்கிரீம், சாக்லேட் ஆகியவற்றைப் பயன்படுத்துவதை குழந்தைப் பருவத்திலிருந்தே குறைக்க வேண்டும். இதை அதிகம் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு கண் பாதிப்புகள் ஏற்படும். கொரோனா காலத்துக்குப் பிறகு சர்க்கரை அளவு விரைவாக அதிகரிக்கிறது. உடல் பருமனாலும் குழந்தைகளுக்கு கண்களில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதன் மூலம் அவர்களுக்கு சர்க்கரை நோயும் ஏற்படுகிறது.
வெளியே சென்று விளையாடாமல் செல்போனை அதிக நேரம் பார்த்துக் கொண்டிருப்பதும் குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம். கண் காய்ந்து போவது, கண்புரை, கண்ணில் புண் ஏற்படுவது ஆகியவை கண் பாதிப்புகளுக்கான முக்கியமான அறிகுறிகள்.