108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானது என சிறப்புக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில். இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஏகாதசி தினத்தன்று கைசிக ஏகாதசி விழா நடைபெறும். இந்த ஆண்டு கைசிக ஏகாதசி விழா 13ஆம் தேதி காலை துவங்கி, 14ஆம் தேதி அதிகாலை வரை நடைபெற்றது.
இதனையொட்டி 13ஆம் தேதி உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டு காலை 10.30 மணிக்கு சந்தன மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு 11:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளி பின்னர் சந்தன மண்டபத்திலிருந்து மாலை 5.30 மணிக்குப் புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
இரண்டாவது புறப்பாடாக நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து இரவு 8.30 மணிக்குப் புறப்பட்டு இரவு 9 மணிக்கு அர்ஜுன மண்டபத்தை வந்தடைந்தார். அங்கிருந்த நம்பெருமாளுக்கு இரவு 9.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை 365 வஸ்திரங்களும் 365 தாம்பலம் அழகிய சேவையுடன் 365 கற்பூர ஆரத்தியும் சமர்ப்பிக்கப்பட்டது. இரவு 11.30 மணி முதல் 14ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை நம்பெருமாள் முன் கைசிக புராணம் எனப்படும் பக்தர் நம்பாடுவான் வரலாற்றை பக்தி சிரத்தையோடு பட்டர் படித்தார்.
கைசிக புராணத்தைப் படித்தாலோ அல்லது கேட்டாலோ நற்பயன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பின்னர் அதிகாலை 5.15 மணிக்கு அர்ஜுன மண்டபத்திலிருந்து புறப்பட்டு, இரண்டாம் பிரகாரத்தில் மேல படி வழியாக காலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவைகளில் காலை 6 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.