புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மேலும், சம்பள உயர்வு மற்றும் பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த சில மாதங்களாக போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில் மேற்படி கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த திங்கள்கிழமை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்ட குழு நிர்வாகிகள் சென்னை எழிலகத்தில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டத்தில் 50 பெண்கள் உள்பட 250 பேர் பங்கேற்றுள்ளனர். இன்று மூன்றாவது நாளாக அவர்களது போராட்டம் நீடிக்கிறது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், சிபிஎம் டி.கே.ரங்கராஜன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அமமுக டிடிவி தினகரன் உள்பட பலர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று மாலை தலைமைச் செயலகத்தை முற்றுகையிடப் போவதாக கூறி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த 70 பேர் நேப்பியர் பாலம் அருகே திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது, ''உங்களுக்கும் சேர்த்துதான் போராட்டம் நடத்துகிறோம். நீங்களும் அரசு ஊழியர்கள்தான். நாங்கள் வைக்கும் கோரிக்கை உங்களுக்காகத்தான். அதனை புரிந்து கொள்ளுங்கள் என்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கூறினர். இருப்பினும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை போலீசார் தடுத்து நிறுத்தியதோடு, அவர்களுடன் கடும் வாக்குவாதம் செய்து அவர்களை இழுத்தும், குண்டுக்காட்டாக தூக்கிச் சென்றும் வேனில் ஏற்றி கைது செய்தனர். கைதாகாமல் போனவர்களையும் பிடித்து இழுந்து வேனில் ஏற்றினர். அப்போது கைதானவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.